சனி, 28 ஆகஸ்ட், 2010

மச்சக்கன்னி மடோனா


உலகில் இருக்கும் மக்கள் தொகையில் கால்பங்கு மக்களை தனது இசைக்கும் கவர்ச்சிக்கும் அடிமையாக்கி வைத்திருந்தார், மடோனா.வறுமையில் வாடிய தனது பெற்றோருக்கு எட்டாவது குழந்தை இவர். கல்லூரி படிப்பு வரை அரசின் உதவித் தொகையோடு படிக்க வேண்டிய நிலை. வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தாலும் எப்படியாவது உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறி மடோனாவுக்கு சின்ன வயதில் இருந்தே தீவிரமாக இருந்தது. அதனால் கல்லூரி நாட்களிலேயே அவர் நடனமாடினார்.படிப்பை முடித்த கையோடு நியூயார்க்குக்கு ரெயிலேறினார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்ததே தவிர அதை எப்படி அடைவது என்ற வழி அவருக்குத் தெரியவில்லை. அதனால் ஓட்டல்களில் நடக்கும் இரவு இசைக் கச்சேரிகளில் குரூப் டான்சராக ஆடினார். டான்ஸ் மூலம் வரும் வருமானம் வயிற்றுக்கு மட்டும் போதுமானதாக இருந்தது. அதை வைத்து பெரிய ஆளாக மாறமுடியாது என்பதை தாமதமாக உணர்ந்தார். அதனால் பாடகியாக வேண்டும் என்று நினைத்தார். குரூப் டான்சராக இருந்த மடோனா கோரஸ் பாடகியாக மாறினார். கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரத்தில் நின்று ‘ஹம்மிங்‘ பாடினார். ஆனால் இந்தக் குரல் எப்படியோ வார்னர் பிரதர்ஸ் நிர்வாகிகள் காதில் விழுந்தது. அவ்வளவுதான் அவருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டத் தொடங்கியது.1981&ல் ‘லைக் எ வர்ஜின்‘ என்ற முதல் கேசட் வெளிவந்தது. அதே காலக்கட்டத்தில் தான் இசைக்கென்றே எம்.டி.வி. என்ற தனிச்சேனல் தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் திரும்பத் திரும்ப மடோனா பாடல்களை வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. மடோனாவின் குரல் இளைஞர்களின் மனதுக்குள் ஊடுருவியது. அதே சமயத்தில் அவரது மூக்குக்கு கீழே இருந்த அழகிய மச்சம் எக்கச்சக்கமானவர்களை சுண்டி இழுத்தது. மச்சக்கன்னி என்று பெயர் வந்தது. தனது குரலைப்போலவே தனது உடலையும் ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை உணர்ந்த மடோனா முதன்முதலாக தொப்புளில் வளையம் மாட்டி, உடலை காட்டிப்பாட ரசிகர்களின் எண்ணிக்கை விறுவிறு என்று கூடியது. மூக்குக்குக்கீழ் இருக்கும் மச்சம் போலவே தொப்புளில் இருக்கும் வளையமும் மடோனாவின் டிரேடு மார்க் ஆனது.பற்றி எரியும் சிலுவைக்கு முன் இவர் பாதிரியாரோடு ஆடிய ‘லைக் எ பிரேயர்‘ என்ற பாடல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நிறைய கண்டனக் குரல்கள் எழுந்தன. அதுவரை ஓரளவுக்கு தெரிந்த மடோனாவின் பெயரும் பாடலும் மூலை முடுக்குகள் எல்லாம் பரவின.அட சர்ச்சையில் இப்படியெல்லாம் நன்மை இருக்கிறதா என்று நினைத்த மடோனா சர்ச்சை கிளப்பும் விஷயங்களையே தேடிக் கண்டுபிடித்து பல ஆல்பங்களை கொண்டு வந்தார். ‘எரோடிகா‘ என்ற ஆல்பம்தான் இதன் உச்சக்கட்டம். மடோனா தற்போது 40களின் இறுதியில் இருக்கிறார். சீன்பென் என்ற நடிகரை திருமணம் செய்தார். குழந்தை பெற்றார். பின்னர் விவாகரத்தும் செய்தார். என்னதான் செய்தாலும் சரி இன்னமும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையவே இல்லை.

மனிதனின் விலை 100 ரூபாய்


யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆனால் மனிதனின் விலை...? மனிதனின் உடலில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வெகுநாட்களுக்கு முன்பாக டால்ஸ்டாய் என்ற அறிஞர் மனிதனே உன் விலை என்ன? என்று கேட்டார். இந்த கேள்வி உலகப் பிரசித்தம். அந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள் விலையை சொல்கிறார்கள். ஒரு மனிதனின் உடலில் 7 பார் சோப்புகளை தயாரிக்கும் அளவுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. ஒரு சிறிய ஆணியை செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு இருக்கிறது. 5 அடிக்கு 5 அடி பரப்புளவு உள்ள 25 சதுர அடி சுவருக்கு மனிதனின் உடலில் உள்ள சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கலாம்.யாரைப்பார்த்தாலும் சர்க்கரை நோய் என்று ஓடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சர்க்கரை தொழிற்சாலையே வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம்தான். மனிதனின் உடலில் இருக்கும் சர்க்கரையைக் கொண்டு இரண்டு கப் காபியை மட்டுமே இனிப்பாக்க முடியும். பாஸ்பரஸ் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்த பாஸ்பரசை கொண்டு 2 ஆயிரம் தீக்குச்சிகள் தயாரிக்கலாம். மேலும் ஒரு சின்ன கரண்டியளவே மக்னீசியமும் உடலில் உள்ளது. இதுபோக ஒரு சின்ன பீரங்கிக் குண்டை வெடிக்க வைக்கும் அளவுக்கு தேவையான பொட்டாசியம், கொஞ்சம் கந்தகமும் உள்ளது. சரி இத்தனையும் விற்றால் என்ன விலை தேறும் என் கிறீர்களா? ரொம்ப சொற்பம்தான். இத்தனையும் சேர்த்து 100 ரூபாய்க்குள் தான் வருகிறது. அந்த வகையில் மனிதனைவிட விலங்குகள் அதிக விலை பெறுகின்றன. மனிதனின் மதிப்பு அவனது மூளைதான். அந்த சின்ன மூளையை வைத்துத்தான் மனிதன் உலகில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். அந்த மூளை விலை மதிப்பற்றது.

சீனப் பெருஞ்சுவர்


பழைய உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது சீனப் பெருஞ்சுவர். இந்த பூமியில் மனிதனால் கட்டப்பட்ட மிக மிக நீளமான சுவர் இதுதான். இந்த சுவர் இன்று நேற்று கட்டப்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவில் தொழில்நுட்பம் வளரவில்லை. அப்போதே இப்படியொரு பிரமாண்டத்தை படைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று அதிசயிக்கிறார்கள், வரலாற்று ஆசிரியர்கள்.நீண்டு உயர்ந்த மலைகள், மணற்பாலைவனங்கள், பள்ளத்தாக்குகள் என்று சுவர், பயணம் செய்யும் பகுதிகள் ஏராளம். சீனப்பெருஞ்சுவரின் நீளம் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர். கிழக்கில் ஷான்ஹாயில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வழியாக தென்பகுதியான மங்கோலியாவின் உட்பகுதி வரை நீண்டு செல்கிறது.இந்த சுவர் ஒரு அதிசயமாக இடம் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்படவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சீனாவுக்கு எப்போதும் எதிரிகளால் ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. திடீர் திடீரென்று யாராவது கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு குதிரை மீது ஏறி சண்டைக்கு வந்து விடுவார்கள். சீன மன்னர்களுக்கு இது ஓயாத தலைவழியாக இருந்தது. இதை எப்படி சரி செய்வது? என்று யோசித்தார்கள். கடைசியாக அரண்மனை போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ள அரண்போல் ஒரு கோட்டைச் சுவரை எழுப்புவார்கள். அதே போன்ற சுவர் ஒன்றை எல்லைப்பகுதியில் கட்டி விடுவது என்று முடிவெடுத்தார்கள். உடனே வேலையில் இறங்கினார்கள்.கி.பி.206-ம் ஆண்டு முதலாம் சின்வம்சத் அரசன் இதைக் கட்ட தொடங்கினார். ஒரு வருடம், இரண்டு வருடம் என்று இழுத்துக் கொண்டே போன பணி 15 வருடங்கள் கழித்து நிறைவடைந்தது. குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இந்த பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட நாட்டில் இருந்த மொத்த மக்களில் 70 சதவீதம் பேர் சுவர் கட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். கி.பி. 221-ல் 5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சுவரை கட்டி முடித்தனர். இதற்கு வான்-லி- குவாங்-கெங் என்று பெயரிட்டனர். அதற்கு 5 ஆயிரம் கி.மீ. நீளமான சுவர் என்று அர்த்தம். இதன் அகலம் 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இருந்தது. உயரம் 7.5 மீட்டர் முதல் 14 மீட்டர் வரை இருந்தது. இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் அவர்களுக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை.சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்தார்கள். 1368-ல் இருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள். 6 ஆயிரத்து 400 கி.மீ. வரை நீண்டது. இந்த சுவரில் மறு சீரமைப்பு பணி தொடங்கியது. இதுவே 200 ஆண்டுகள் வரை நீடித்தது.இந்த சுவர் சீனாவின் அடையாளம். இதைப்பார்க்க நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள். தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருக்கும் மட்டியான்யு மற்றும் சைமைதாயு என்ற இரண்டு இடங்களில் மட்டுமே பார்வையாளர்கள் சீனப்பெருஞ்சுவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள சுவர்கள் எல்லாம் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கெல்லாம் சுற்றிப்பார்ப்பதற்கு என்று சுவரை நெருங்கினாலே உயிருக்கு ஆபத்து.சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கும் அறைகள் கட்டப்பட்டன. ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகைபோட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.

மின்னல் மின்சாரம்


வாழ்க்கையில் 2 வருடம் பள்ளிக்கு சென்றதோடு சரி. அதன்பின் மழைக்காகக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் பெஞ்சமின் பிராங்க்ளின். ஆனால் இவர் கணக்கு, இலக்கணம் கற்று ஒரு சிறந்த அரசியல்வாதியாக, பொதுநல ஊழியராக, விஞ்ஞானியாக, வியாபாரியாக இருந்து சாதனை படைத்தவர். அமெரிக்காவில் டாஸ்ட்டன் நகரில் ஒரு மெழுகுதிரி தொழிற்சாலை நடத்தி வந்தவருக்கு 17 குழந்தைகள் இருந்தன. அதில் 15-வது குழந்தையாக பிறந்தவர் தான் பிராங்க்ளின். இவர் 1706-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி பிறந்தார். வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் நிறைய புத்தகங்களை படித்தார். சில நேரங்களில் சாப்பாட்டுக்காக வைத்திருந்த பணத்தில் கூட புத்தகங்களை வாங்கிப் படித்தார். படிப்பறிவோடு எழுதும் ஆற்றலும் பிராங்க்ளினுக்கு உண்டானது. பிராங்க்ளின் 1753-ம் ஆண்டு அமெரிக்க காலனிகளின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகவும் வேலை பார்த்திருக்கிறார். தபால் இலாகாவில் சீர்திருத்தங்கள் செய்து, வருமானம் தரக்கூடிய இலாகாவாக மாற்றியமைத்தார். 1847-ல் அமெரிக்கா முதன் முதலாக ஸ்டாம்புகள் வெளியிட்ட போது பிராங்க்ளின் உருவம் பொறித்த ஸ்டாம்புகளை வெளியிட்டு கவுரவப்படுத்தியது.பிராங்க்ளின் தான் நூலகம் என்ற ஒன்றை முதன் முதலாக உருவாக்கினார். அரிய நூல்களை பலரும் படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தீவிபத்தினால் ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்தார். இவர் தோற்றுவித்த பென்சில்வேனியா கல்லூரியானது, பிற்காலத்தில் பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. விஞ்ஞான ஆராய்ச்சியிலும் பிராங்க்ளின் கவனம் செலுத்தினார். தனது 42-வது வயதில் நல்ல பொருளாதார நிலையை அடைந்ததும் வியாபாரத்தில் இருந்து விலகி, பொதுநல சேவைக்காக தன் வாழ்நாட்களை செலவிட நினைத்தார்.மின்னலில் மின்சாரம் உள்ளது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார். இடிதாங்கியை கண்டுபிடித்தார். மின்சாரத்தை கம்பி மூலம் வேறு இடத்துக்கு அனுப்ப முடியும் என்ற உண்மையை உலகத்திற்குச் சொன்னவர், இவர் தான். பசியின் கொடுமையை அறிந்தவன், உணர்ந்தவன் தான் அறிவாளியாக முடியும் என்று சொன்னவர், பிராங்க்ளின். அவர் சொன்னது போலவே வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது அயராத உழைப்பால் உலகம் போற்றும் மேதையானார். மனிதனாக பிறந்தவன் சிந்திக்க வேண்டும். சிந்திப்பவன் தான் மனிதன் என்ற கொள்கை உடையவராக விளங்கினார், பிராங்க்ளின். 1790 ஏப்ரல் 17-ந்தேதி அவர் மண்ணுலகை நீத்தார். போர் என்பது அமைதியான வாழ்வை சீர்குலைத்து அழிவினை தேடித்தருகிறது. எனவே சமுதாயம் அமைதியாக வாழ சமாதானமே சிறந்த வழி என்ற உண்மையை உலகநாடுகளுக்கு உணர்த்திய பிராங்க்ளினின் பெயர் சரித்திரத்தில் என்றென்றும் அழியாப்புகழுடன் விளங்கும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

பீர் குடிக்கும் பெண்களுக்கு தோல் நோய் ஏற்படலாம்


பீர் குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பீர் குடிக்கும் பெண்களை இந்த நோய் தாக்கும் அபாயம் 70 சதவீதம் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்கமாக பீர் குடிக்கும் பெண்களுக்கு சோரியாசிஸ் என்ற நோய் தாக்குகிறது. இந்த நோய் காரணமாக தோலில் தடிப்பு ஏற்படுகிறது. தோல் சிவந்து போகிறது. இது மொத்த மக்கள் தொகையில் 2 முதல் 3 சதவீத பெண்களை தாக்குகிறது.ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 1991-ம் ஆண்டு 82 ஆயிரத்து 869 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், பீர் குடிக்கும் பெண்களுக்கு அதை குடிக்காத பெண்களை விட சோரியாசிஸ் நோய் தாக்கும் அபாயம் 72 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த குட்டிகள்



தைவான் நாட்டில் உள்ள தைனான் என்ற இடத்தில் உள்ள தனியார் மிருகக்காட்சி சாலை ஒன்றில் சிங்கத்துக்கும். பெண் புலிக்கும் ஏற்பட்ட உறவில் பிறந்த குட்டிகளை படத்தில் காணலாம். இவற்றை Ôலைகர்Õ என்று அழைக்கிறார்கள். பெண்புலி 3 குட்டிகள் போட்டது. அவற்றில் ஒன்று இறந்து விட்டது. மீதி 2 குட்டிகள் தூங்கும் காட்சியை தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த குட்டிகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் அந்த மையத்துக்கு சாரை சாரையாக சென்றபடி இருக்கிறார்கள்.

வைரம்


வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை; விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன.
உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது. மற்ற எல்லா ரத்தினங்களை விடவும், வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு.
தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும், ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால், அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது.
பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன. ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில், இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

காமிராவின் தொடக்கம்


இன்று காமிரா என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. மொபைல் போன்களில் கூட தரமான காமிராக்கள் வந்துவிட்டன. டிஜிட்டல் என்ற ஒன்று உருவானபின்னர் ஏற்பட்ட வளர்ச்சிதான் இது. காமிராவின் வளர்ச்சி 1578ல் இருந்து தொடங்குகிறது.
ஜியாபாட்டிஸ்டா டெலலாபோர்டா என்பவர்தான் முதல் காமிராவான அப்ஸ்க்யூராவை உருவாக்கியவர். அதை ஊசி ஓட்டை காமிரா என்று அழைத்தனர்.
ஆரம்பகால காமிராக்களை உருவாக்கியதில் ஓவியர்களுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. தங்கள் முன் தெரியும் காட்சியை தத்ரூபமாக வரைவதற்காக அவர்கள் காமிராவை பயன்படுத்தினார்கள்.
காமிராவின் சிறிய துளை மூலம் ஊடுருவி வரும் ஒளியை ஒரு டிராயிங் பேப்பரில் விழச்செய்து அதை அப்படியே ஸ்கெட்ச் செய்து கொள்வதில் ஆரம்பித்தது தான் காமிராவின் கதை.
1814ல் பிரான்ஸ் நாட்டில் முதல் போட்டோ மரப்பெட்டி காமிரா மூலம் எடுக்கப்பட்டது. நாம் பார்க்கும் காட்சியை ஒளியில் பதிவு செய்து நிழற்படமாக மாற்றிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் காமிரா.
போட்டோகிராபி என்ற ஆங்கிலச்சொல், போட்டோஸ் மற்றும் கிராபி என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. இதில் போட்டோஸ் என்பது ஒளியையும், கிராபி என்பது வரைவதையும் குறிக்கிறது.
1839ல் விஞ்ஞானி சல்ஜான் எம்.வி.ஹெர்செல் என்பவர்தான் முதன்முதலாக போட்டோகிராபி என்ற சொல்லை பயன்படுத்தினார். விஞ்ஞான அடிப்படையில் போட்டோகிராபி என்பது ஒளியின் வினையால் பிலிமில் ஏற்படும் ரசாயன மாற்றத்தின் நிகழ்வையே குறிக்கும்.
தற்போது நாம் பயன்படுத்திவரும் போட்டோகிராபி முறையை அறிமுகப்படுத்தியவர் ஜாக்ஸ்மோர்ட் டாகுரி என்பவர். பெயிண்டரான டாகுரி ஜொசர் நிக்கோபர் நிப்ஸ் என்பவருடன் இணைந்து 1829ல் காமிராவுக்கு நிலையான இறுதி வடிவம் கொடுத்தார். பலவருட ஆராய்ச்சிக்குப்பின் இது சாத்தியமானது. இதற்கு டாகுரியோ டைப் என்றே பெயர் வைக்கப்பட்டது. இது மிகவும் பிரபலமானது.
1884-ல் டபிள்யூ. எச்.வாக்கர் என்பவர் காமிராவுக்கான ரோல் பிலிமை கண்டுபிடித்தார். ஜார்ஜ் ஈஸ்ட்மென் 1888ல் அதை வியாபாரம் செய்தார். 1889ல் கோடாக் பாக்ஸ் காமிரா அறிமுகமானது. இந்த காமிராவில் 100 படங்கள் எடுக்கும் அளவிற்கு பிலிம் லோடு செய்யப்பட்டிருக்கும். படம் எடுத்தபின் காமிராவை தூக்கிக்கொண்டு கோடாக் கம்பெனிக்கு போக வேண்டும். அவர்கள் அந்த பிலிமை தனியாக இருட்டறையில் எடுத்து புதிதாக 100 படங்கள் எடுக்கும் விதத்தில் புதிய பிலிமை மாற்றி கொடுப்பார்கள்.
ஜார்ஜ் ஈஸ்ட்மென் நிறைய மாடல்களை காமிராவில் அறிமுகப்படுத்தினார். மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய போல்டிங் காமிராவும் அதில் உண்டு. எட்வின் லேண்ட் என்பவர் 1948ல் முதல் போலராய்டு காமிராவை உருவாக்கினார். காமிராவுக்குள்ளேயே படங்களை டெவலப் செய்யும் வசதி அதில் இருந்தது. எடுத்த படத்தை சில நொடிகளில் பார்க்க முடிந்தது.
கோடாக் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு காமிரா டிஸ்க் என்ற வகையை அறிமுகப்படுத்தியது. அதில் பிலிம் கிடையாது. எடுத்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் தான் பார்க்க முடியும், பிரிண்ட் போட முடியும். இன்றைய டிஜிட்டல் காமிராக்களுக்கு அதுவே முன்னோடி எனலாம்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

இந்திய மக்கள் தொகை


மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. சில மாநிலங்களில் நடந்து வருகிறது. உலக பரப்பளவில் 2.4 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பு கொண்டுள்ள இந்தியா உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தை பெற்றுள்ளது. 2000ம் ஆண்டு மே மாதம் இந்திய மக்கள் தொகை 100 கோடியை கடந்துவிட்டது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகை 102 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து436. ஆண்கள் 53 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 90. பெண்கள் 49 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 346 பேர். ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர். ஒரு சதுர கி.மீ.க்கு 325 பேர் வசிக்கின்றனர். 64.89 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872&ல் நடத்தப்பட்டது. இருப்பினும் 1881&ல் தான் முழுஅளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போதைய ஆங்கிலேய வைசிராயான ரிப்பன் பிரபு தான் இதனை நடத்தினார். அப்போது பிளிண்டன் என்பவர் இந்தியாவின் முதல் சென்சஸ் கமிஷனராக இருந்தார்.
1881 முதல் 1941 வரை சென்சஸ் கமிஷனரே மக்கள்தொகை கணக்கெடுப்பு பொறுப்பு வகித்தவர். 1949 முதல் இந்த பொறுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனரிடம் மாற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனராக இருந்தவர் எம்.டபிள்யூ.எம்.யேட்ஸ். இந்த பதவிக்கு வந்த முதல் இந்தியர் ஆர்.ஏ.கோபால்சாமி. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9&ந் தேதி மக்கள்தொகை தினமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 82 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 868 இந்துக்கள் உள்ளனர். 13 கோடியே 81 லட்சத்து 88 ஆயிரத்து 240 பேர் முஸ்லிம்கள். 2 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரத்து 16 பேர் கிறிஸ்துவர்கள். 69 லட்சத்து 601 பேர் பார்சிகள்.
இந்தியாவில் 23 மாநிலங்கள், 5 மத்திய ஆட்சி பகுதிகள் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் இந்துக்களே அதிகம் உள்ளனர். ஜம்மு&காஷ்மீர், லட்சத்தீவுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா போன்ற பகுதிகளில் கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ளனர்.
பஞ்சாபில் சீக்கியர்கள் பெருமளவில் உள்ளனர். நாட்டில் அதிகமாக கிறிஸ்துவர்களை கொண்ட மாவட்டம் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் ஆகும். அதிகமான முஸ்லிம்கள் உள்ள மாவட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம் ஆகும்.
தாழ்த்தப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலம் பஞ்சாப். இங்கு 28.9 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளனர். பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலம் மிசோரம். இங்கு 94.5 சதவீதத்தினர் பழங்குடிகளே. மத்திய ஆட்சிப்பகுதிகளில், சண்டிகர் 17.5 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. பழங்குடியினரை அதிகம் கொண்ட மத்திய ஆட்சிப்பகுதி லட்சத்தீவு. இங்கு 94.2 சதவீதத்தினர் பழங்குடியினர்.

சுறா


மீன்களில் கிட்டத்தட்ட 1,500 வகைகள் உள்ளன. இந்த மீன்களில் மிகவும் பெரியது திமிங்கல சுறா. இது 21 மீட்டர் நீளம் வரை வளரும். இதுதான் மீன்களிலேயே வேகமாக நீந்தக்கூடியது. 45 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இரையை அப்படியே விழுங்கிவிடும். பசி நேரம் என்றால் 91 கிலோ எடை கொண்ட ஆமையைக்கூட தின்றுவிடும்.
கடலில் வாழும் பெரிய உயிரினங்களை கொன்று தின்பதுதான் இதன் பொழுதுபோக்கு. காட்டில் புலி எப்படியோ அது போன்று கடலில் சுறா. அதனால் தான் இதற்கு கடற்புலி என்று பெயர்.
தனது வலிமையான வாலால் இரையை அடித்து வீழ்த்தும். எப்போதும் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டே சிக்கிய மீன்களை எல்லாம் விழுங்கிக்கொண்டே போகும்.
சுறாமீன்களின் உட்கூடு குருத்தெலும்பால் ஆனது. தாய்சுறாவின் கருப்பையில் இருந்து குட்டிகள் வெளி வருகின்றன. சுறாக்களில் மிகவும் கொடூரமானது வெண்சுறா. இது சுமார் 12 மீட்டர் நீளம் கொண்டது. இதை விட பெரிய சுறாவும் உண்டு. வெண் சுறாவை விட பெரிதான புலி போல் வரிகளை கொண்ட புலிசுறா மகா சாது. இது முட்டைகளை ஜவ்வினால் ஆன ஒரு பைக்குள் இட்டுவைக்கிறது. அந்த பையை தாவரங்களுக்கு இடையே போட்டுவிட்டு போய்விடும். கொஞ்ச நாட்களில் முட்டை பொரித்து குஞ்சுகள் ஜவ்வுப்பையை கிழித்துக்கொண்டு வெளியே வரும்.
பெரிய கண்களும், அகலமான மூக்கும், தட்டையான தலையும் கொண்டது, ‘கொம்பன்சுறா‘. உடலை விட இரண்டு மடங்கு நீளமான வாலை கொண்டது. போர்சுறா என்பது 2 மீட்டர் நீளம் உடையது. இவை ஒன்று சேர்ந்தால் பெரிய திமிங்கலங்களைக்கூட ஓடஓட விரட்டும். இதுபோக வள்ளுவன் சுறா, பால்சுறா போன்றவையும் உள்ளன.
சுறாவின் கல்லீரலில் இருந்துதான் மீன் எண்ணை எடுக்கிறார்கள். சுறாக்களில் அதிகமாக மனிதனுக்கு பயன்படுவது இரிளோடான் சுறா. இதன் தோலில் இருந்து மணிபர்ஸ் தயாரிக்கப்படுகிறது.