வெள்ளி, 17 டிசம்பர், 2010

செல்போன் பற்றிய தகவல்கள் சரியா? தவறா?


செல்போனை பற்றியும் அதன் கதிரியக்கங்களை பற்றியும் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் அறிவியல்பூர்வமான உண்மை எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்க்கலாம்.
*விமான பயணத்தின் போது செல்போனை பயன்படுத்தினால் அதன் சிக்னல்கள் விமானத்தின் மின்னணு கருவிகள் செயல் பாட்டில் குளறுபடியை ஏற்படுத்திவிடும். இது விமானத்தையே செயலிழக்க வைத்துவிடும். இது சரிதான் என்று இதுவரை எந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்லவில்லை. இருந்தாலும் ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக செல்போனில் தொடர்பு கொள்வதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
*பெட்ரோல் பங்குகளில் செல்போனை பயன்படுத்தினால் தீப்பற்றிக்கொள்ளும் என்ற எண்ணம் உள்ளது. இது உண்மை இல்லை என்பது பலரது கருத்து. செல்போன்களில் இருந்து உருவாகும் ஸ்டாடிக் எலக்ட்ரிக் சார்ஜ் எனப்படும் மின்சக்தியின் அளவானது, தீப்பொறியை உண்டாக்கும் அளவிற்கு இருக்காது என்று நிச்சயமாக சொல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் எண்ணெய் நிறுவனமான ஷெல் இது குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டு உலகமெங்கும் இ&மெயில்கள் பறந்தன. இப்போது ஷெல் நிறுவனமும் இதை மறுத்துள்ளது.
*செல்போனை தொடர்ந்து உபயோகித்தால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மூளையில் கட்டிகளையும் மூளை கேன்சரையும் உருவாக்கும் என்பது மற்றொரு கருத்து. ஆனால் இதுகுறித்தும் உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நலம் என்பது ஆய்வின் கருத்து.
*செல்போனில் பேட்டரி சார்ஜ் குறைந்தால், ஒரு குறிப்பிட்ட எண்ணை அழுத்தினால் சார்ஜ் ஏறும், அதை வைத்து அவசர அழைப்பனை பேசிவிடலாம் என்பது மற்றொரு கருத்து. ஆனால் இது உண்மை கிடையாது. பேட்டரி சார்ஜ் குறைந்தால் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டுமே தவிர வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது.
*மருத்துவ மனைகளில் பயன்படுத்துவதால், மருத்துவக் கருவிகள் பாதிக்கப்படும், கதிர்வீச்சு நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பது மற்றொரு கருத்து. இதிலும் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் செல்போன்களை சைலண்ட் மோடில் வைப்பது நல்லது.
*செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தால், ஆண்மைக்குறைவு ஏற்படும், உயிரணுக்கள் பாதிக்கப்படும், ஆண்களை மலடாக்கும் என்று நிறைய செய்திகள் வருகின்றன. இதில் ஓரளவு உண்மை உள்ளது. பொதுவாக உடல் வெப்பநிலையை காட்டிலும் குறைவான வெப்பநிலையில் தான் உயிரணுக்கள் உற்பத்தியாகும். ஆன் செய்த செல்போன்கள் தொடர்ந்து கதிர்வீச்சை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அந்த நிலையில் பேண்ட் பாக்கெட்டில் செல்போனை அதிக நேரம் வைத்திருந்தால், உயிரணுக்கள் குறைந்து ஆண்மை பாதிக்கப்படலாம் என்கின்றனர், விஞ்ஞானிகள்.
எனவே ஆண்கள் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்ப்பது, அவர்களுக்கும் நல்லது, வாரிசு உருவாவதற்கும் நல்லது.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

கடத்தல் சக்கரவர்த்தி எஸ்கோபார்


சினிமாவில் நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் வில்லன்கள் கடத்தல் தொழில் செய்து கோடி கோடியாக பணம் சம்பாதிப் பவர்களாக காட்டி யிருப்பார்கள். ஆனால் உண்மையில் ஒரு கடத் தல்காரன் எப்படி இருப்பான் என்பதை Ôஎஸ்கோபார்Õ என்பவனை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். கொலம்பியா நாட்டைச் சேர்ந்த எஸ்கோபார் தன் நாட்டை மட்டு மல்லாது, அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களையும் ஆட்டிப் படைத்த வன். போதைப்பொருள் கடத்தலை பயந்து, பயந்து செய்யாமல் ஒரு பன்னாட்டு நிறுவனம் போல் அலுவலகம், தொழிற்கூடம், டீலர், சப் டீலர் என்று உலகம் முழுவதும் நியமித்து ஒரு பக்காவான தொழிலாகவே செய்து வந்தான். போதைப் பொருட்களை தரும் செடிகளை பயிரிட கொலம்பியாவில் உள்ள நிலங்கள் போதாது என்பதால், பிரேசில், பெரு, வெனிசுலா போன்ற அருகில் உள்ள நாடுகளையும் குத்தகைக்கு எடுத்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அந்த செடிகளை பயிரிட்டான்.போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காகவே நான்கு விமானங்களை வைத்திருந்தான். விமானங்களை இறக்கவும், ஏற்றவும் பல நாடுகளில் தனியாக விமான ஓடுதளங் களையே வைத்திருந்தான்.கொலம்பியா ஓர் ஏழை நாடு. அங்கு பலரும் வயிற்றுப்பிழைப்புக் காக பயந்து, பயந்து போதைப்பொருட்களை பயிரிட்டு கடத்தல் காரர்களுக்கு விற்று வந்தனர். எஸ்கோபார் இந்த தொழிலுக்கு வந்ததும் நிலைமையே மாறியது. இது பயந்து செய்ய வேண்டிய தொழில் இல்லை. விஞ்ஞானப்பூர்வமாக செய்ய வேண்டிய தொழில் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை செலவழித்து போதைப்பொருள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு என்று பரிசோதனை கூடங்களையும் நிறுவினான்.கிராம சேவகர்கள் என்ற இவனுடைய பணியாளர்கள் கிராமம் கிராமமாக சென்று ஏதோ நெல் விவசாயத்திற்கு விளக்கம் கொடுப்பதுபோல் போதை செடிகளை எப்படி பயிரிடுவது? என்ன உரம் போடுவது என்ற அனைத்து விவரங் களையும் இலவசமாக சொல்லி வந்தனர்.கொலம்பியாவின் பொருளாதாரமே போதைப் பொருளை சார்ந்திருக்கும் நிலைக்கு வந்தது. எஸ்கோபார் அனுப்பும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்கர்களையும் குட்டிச் சுவராக்குகின்றன என்று கூறிய அமெரிக்கா, எஸ்கோபாரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டது. அதனால் ஒப்புக்காக 1976-ல் எஸ்கோபாரை கொலம்பியா கைது செய்தது. சிறையில் நீச்சல்குளம் முதற்கொண்டு அவன் கேட்ட அத்தனை வசதிகளையும் அந்த சிறை மாளிகையில் செய்து கொடுத்தது. கொஞ்சநாளில் அவன் வெளியே வந்துவிட்டான்.மீண்டும் 1991-ல் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. கொலம்பியா கோர்ட்டுக்கு எஸ்கோபார் கொண்டு செல்லப்பட் டான். அவன் நீதிமன்ற வாசலை மிதிக்கும் முன்னே அவனுக்கு எதிராக வழக்காடும் வக்கீல்கள் உள்பட அனைவரும் கொல் லப்பட்டனர்.அப்போது எங்களிடம் எஸ்கோபாரை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா ஒற்றைக்காலில் நிற்க, இதை செய்ய முடியாத அளவுக்கு ஒரு சட்டத்தையே தனது செல்வாக்கால் எஸ்கோபார் கொண்டு வந்தான். ஆனால் எப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கும் ஒரு நாள் மோசமான சாவு உண்டு என்ற உண்மை எஸ்கோபார் வாழ்விலும் நடந்தது.1993-ல் ஒரு பெரிய ராணுவ பட்டாலியன், எஸ்கோபாரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டுக்கொன்றது. அதன் பின்னரே அமெரிக்காவுக்கு நிம்மதி பிறந்தது.

வியாழன், 21 அக்டோபர், 2010

புற்றுநோயை வென்றவர்



‘உங்களுக்கு புற்றுநோய் பிழைக்க வாய்ப்பே இல்லை‘, என்று டாக்டர்கள் ஒரு 25 வயது வாலிபனிடம் சொன்னால் எப்படிப்பட்ட மனிதனும் நொறுங்கி போவான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் அப்படி நொறுங்க வில்லை.
வேகமாக சைக்கிள் ஓட்டும் தன் திறமையையும், இளமையையும் ஒரு வியாதிக்கு பலி கொடுப்பதா? என்று நினைத்த லான்ஸ் நம்பிக்கையோடு சிகிச்சைகளை எதிர்கொண்டு முழுமையாக குணமடைந்தார். அப்பாடா ஒரு வழியாக பிழைத்து விட்டோம், இனி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று அவர் ஒதுங்கி விட வில்லை. பழையபடி மீண்டும் சைக்கிளை ஓட்ட தொடங்கினார். படிப்படியாக வெற்றிகளை குவித்தார்.
புற்றுநோயை வென்றவர் என்ற ஒரு பெருமையோடு தன் வாழ்நாள் முடிந்து விடகூடாது என்று நினைத்தார். அந்த பெருமையை ஒரு ஓரமாக தூக்கி வைத்தார். உலகின் நம்பர் ஒன் சைக்கிளிங் சாம்பியன் என்ற பட்டத்தை பெறுவதற்காக உழைத்தார். வெற்றியும் அடைந்தார்.
தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக அமெரிக்கர்கள் இவரை பார்க்கிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பிறந்த லான்சை வளர்த்தது அவருடைய அம்மா லிண்டா. 7 வயதில் சைக்கிள் ஓட்ட தொடங்கிய லான்ஸ், அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘ட்ரையத்லான்‘ போட்டிகளில் கலந்து கொண்டார்.
‘ட்ரையத்லான்‘ என்பது மூன்று விதமான போட்டிகளின் கலவை. ஒரு கிலோ மீட்டர் நீச்சலடிக்க வேண்டும். 15 மைல் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். மூன்று மைல் ஓட வேண்டும். இதில் பல கோப்பைகளை சின்ன வயதிலேயே பெற்றிருக்கிறார் லான்ஸ். வெற்றிகளை தொடர்ந்து குவித்து கொண்டே இருந்த லான்ஸ்க்கு 1996&ல் தாங்க முடியாத தலைவலி, ரத்த வாந்தி. அதில் மிகவும் தளர்ந்து போனார். டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ததில் தான் புற்று நோய் தெரியவந்தது. தனக்கென தனித்தன்மை வாய்ந்த எதிர்காலத்தை தேடி கொண்டு இருக்கும் ஒரு இளைஞனுக்கு இதை விட அதிர்ச்சியளிக்கும் செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. பிழைக்க மாட்டீர்கள் என்று சொன்ன டாக்டர்களுக்கு லான்ஸ் உறுதியாக கூறிய பதில் இது தான்.
இந்த அல்ப கேன்சருக்காக நான் என் லட்சியத்தை மாற்றி கொள்ள முடியாது. அதிலிருந்து குணமடைந்து பின் மீண்டும் சைக்கிள் ஓட்டி நான் உலகின் நம்பர் ஒன் வீரனாக வரவேண்டும். அதற்கான வாய்ப்புகள் பாதிக்காதபடி எனக்கு சிகிச்சை கொடுங்கள் என்றார்.
சில மாதங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் அளவில் மிகவும் தளர்ந்து போயிருந்த போதும் நம்பிக்கை இழக்காமல் எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கி கொண்டு காத்திருந்தார். 1997-ல் கேன்சரில் இருந்து பூரணமாக குணம் அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். லான்ஸ் மீண்டும் தன் சைக்கிளை எடுத்தார். தினமும் பயிற்சி செய்தார். போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி பெற
முடியவில்லை. ஆனாலும் உலகம் அவரை வெற்றியாளராகவே பார்த்தது.
கடுமையான புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தளவுக்கு விளையாடுவதே மிக பெரிய விஷயம் என்று பெருமையான செய்திகள் வெளிவந்தன. லான்ஸ் இது போன்ற பெருமைகளை வெறுத்தார். தன்னை பார்த்து யாரும் உச்சுக்கொட்ட வேண்டியதில்லை. கைதட்ட வேண்டும் என்று விரும்பினார். அதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்.

உழைப்பு வீண் போகவில்லை. 1999-ல் சைக்கிளிங்கில் உலக கோப்பையாக கருதப்படும் ‘டூர் டி பிரான்ஸ்‘ என்ற போட்டியில் லான்ஸ் முதலிடத்தை பிடித்தார். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. புற்றுநோய் வந்தவர்களுக்கு அடுத்து வாழ்க்கையில் எதுவுமே கிடையாது என்ற பழைய பஞ்சாகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி.
புற்றுநோய் வருவதற்கு முன்பு லான்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் அதிலிருந்து குணமான பிறகு சவாலான இந்த பந்தயத்தில் ஒரு முறையல்ல, தொடர்ந்து ஏழு முறை வென்று 1999ல் இருந்து 2005 வரையிலான எல்லா கோப்பைகளையும் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அள்ளி சென்றார். ஏழாவது முறை ‘டூர் டி பிரான்ஸ்‘ கோப்பையை பெற்று சரித்தரம் படைத்த லான்ஸ் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

வெறி நாய்க் கடி


வெறி நாய்க் கடிமனிதனுக்கு மிகவும் நெருங்கிய விசுவாசமுள்ள விலங்கு, நாய். ஆனால் இந்த நாய்க்கு வெறிபிடித்தால் ஆபத்து. வெறிநாய்க் கடிக்கு சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரைக்கூட இழக்க நேரிடலாம். நாய்க்கு ‘ரேபிஸ்‘ என்ற ஒரு நோய் தாக்கக்கூடும். இந்த நோய் தாக்கிய நாயையே வெறிநாய் என்கிறோம். இந்த நோய் காற்றில் வரும் சில வைரஸ்க-ளால் பரவுகிறது. நாயின் தோலில் ஏற்படும் வெட்டுக்காயம் அல்லது புண் வழியாக இந்த வைரஸ்கள் உள்ளே நுழைகின்றன. நுழைந்த வைரஸ்கள் 4 முதல் 6 வாரங்களில் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். அதன் விளைவாக நாய்க்கு ஜுரம் ஏற்பட்டு அசையாமல் படுத்துக் கிடக்கும். சாப்பிடாது. அந்த வைரஸ், மூளையைத் தாக்கும்போது, நாய் நிலை கொள்ளாமல் தவிக்கும். பிறகு ஒரே உறுமலும், குரைப்பதுமாக இருக்கும். வாயில் இருந்து உமிழ்நீர் நுரைத்தபடி வழியும். இந்த நேரத்தில் வளர்ப்பவரைக் கூட நாய் கடித்துக் குதறிவிடும். வெறிநாயின் நிலை இதுதான். இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஜந்தாறு நாட்களில் நாய் இறந்துவிடும். வெறிநாய், மனிதனை கடிக்கும் போது அதன் உமிழ்நீரில் கலந்துள்ள கிருமிகள் காயத்தின் வழியாக மனித உடலில் புகுந்து விடும். கடிபட்ட மனிதருக்கு முதலில் மனத்தளர்ச்சி ஏற்படும். காய்ச்சல் வரும். கவலைகள் வாட்டி எடுக்கும். தூக்கமின்மையும் வீணான பயங்களும் மனதை அவஸ்தைப்பட வைக்கும். தொண்டையில் தசைநார்கள் தளர்ந்துவிடும். உணவோ தண்ணீரோ அருந்த முடியாத நிலை ஏற்படும். தண்ணீரைப் பார்த்தாலே பயம் வரும். இதனால் இந்த நோயை ‘ஹைட்ரோ போபியோ‘ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதாவது நீரை கண்டு பயப்படும் வியாதி என்று இதற்கு அர்த்தம். வெறிநாய் கடித்து ஒரு மாதம் முதல் 3 மாதத்திற்குள் இந்த அறிகுறிகள் தென்படும். கழுத்து, வாய், தலை ஆகிய பகுதிகளில் நாய் கடித்தால் இந்த நோய் விரைவிலேயே பரவி விடும். வெறிநாய் கடித்தவுடன் கடி பட்ட இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்குள் ‘ஆண்டி-ரேபிஸ்‘ ஊசி போட்டு 5 நாட்கள் நாயை கண்காணிக்க வேண்டும். இதற்குள் நாய் இறக்கவில்லை என்றால் நாய் வெறிநாய் இல்லை என்பதை அறியலாம். வெறிநாய்க் கடிக்கான சிகிச்சையையும் நிறுத்திவிடலாம்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

மச்சக்கன்னி மடோனா


உலகில் இருக்கும் மக்கள் தொகையில் கால்பங்கு மக்களை தனது இசைக்கும் கவர்ச்சிக்கும் அடிமையாக்கி வைத்திருந்தார், மடோனா.வறுமையில் வாடிய தனது பெற்றோருக்கு எட்டாவது குழந்தை இவர். கல்லூரி படிப்பு வரை அரசின் உதவித் தொகையோடு படிக்க வேண்டிய நிலை. வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தாலும் எப்படியாவது உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறி மடோனாவுக்கு சின்ன வயதில் இருந்தே தீவிரமாக இருந்தது. அதனால் கல்லூரி நாட்களிலேயே அவர் நடனமாடினார்.படிப்பை முடித்த கையோடு நியூயார்க்குக்கு ரெயிலேறினார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்ததே தவிர அதை எப்படி அடைவது என்ற வழி அவருக்குத் தெரியவில்லை. அதனால் ஓட்டல்களில் நடக்கும் இரவு இசைக் கச்சேரிகளில் குரூப் டான்சராக ஆடினார். டான்ஸ் மூலம் வரும் வருமானம் வயிற்றுக்கு மட்டும் போதுமானதாக இருந்தது. அதை வைத்து பெரிய ஆளாக மாறமுடியாது என்பதை தாமதமாக உணர்ந்தார். அதனால் பாடகியாக வேண்டும் என்று நினைத்தார். குரூப் டான்சராக இருந்த மடோனா கோரஸ் பாடகியாக மாறினார். கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரத்தில் நின்று ‘ஹம்மிங்‘ பாடினார். ஆனால் இந்தக் குரல் எப்படியோ வார்னர் பிரதர்ஸ் நிர்வாகிகள் காதில் விழுந்தது. அவ்வளவுதான் அவருக்கு அதிர்ஷ்ட மழை கொட்டத் தொடங்கியது.1981&ல் ‘லைக் எ வர்ஜின்‘ என்ற முதல் கேசட் வெளிவந்தது. அதே காலக்கட்டத்தில் தான் இசைக்கென்றே எம்.டி.வி. என்ற தனிச்சேனல் தொடங்கப்பட்டது. இந்தச் சேனல் திரும்பத் திரும்ப மடோனா பாடல்களை வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. மடோனாவின் குரல் இளைஞர்களின் மனதுக்குள் ஊடுருவியது. அதே சமயத்தில் அவரது மூக்குக்கு கீழே இருந்த அழகிய மச்சம் எக்கச்சக்கமானவர்களை சுண்டி இழுத்தது. மச்சக்கன்னி என்று பெயர் வந்தது. தனது குரலைப்போலவே தனது உடலையும் ரசிகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை உணர்ந்த மடோனா முதன்முதலாக தொப்புளில் வளையம் மாட்டி, உடலை காட்டிப்பாட ரசிகர்களின் எண்ணிக்கை விறுவிறு என்று கூடியது. மூக்குக்குக்கீழ் இருக்கும் மச்சம் போலவே தொப்புளில் இருக்கும் வளையமும் மடோனாவின் டிரேடு மார்க் ஆனது.பற்றி எரியும் சிலுவைக்கு முன் இவர் பாதிரியாரோடு ஆடிய ‘லைக் எ பிரேயர்‘ என்ற பாடல் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நிறைய கண்டனக் குரல்கள் எழுந்தன. அதுவரை ஓரளவுக்கு தெரிந்த மடோனாவின் பெயரும் பாடலும் மூலை முடுக்குகள் எல்லாம் பரவின.அட சர்ச்சையில் இப்படியெல்லாம் நன்மை இருக்கிறதா என்று நினைத்த மடோனா சர்ச்சை கிளப்பும் விஷயங்களையே தேடிக் கண்டுபிடித்து பல ஆல்பங்களை கொண்டு வந்தார். ‘எரோடிகா‘ என்ற ஆல்பம்தான் இதன் உச்சக்கட்டம். மடோனா தற்போது 40களின் இறுதியில் இருக்கிறார். சீன்பென் என்ற நடிகரை திருமணம் செய்தார். குழந்தை பெற்றார். பின்னர் விவாகரத்தும் செய்தார். என்னதான் செய்தாலும் சரி இன்னமும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையவே இல்லை.

மனிதனின் விலை 100 ரூபாய்


யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆனால் மனிதனின் விலை...? மனிதனின் உடலில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வெகுநாட்களுக்கு முன்பாக டால்ஸ்டாய் என்ற அறிஞர் மனிதனே உன் விலை என்ன? என்று கேட்டார். இந்த கேள்வி உலகப் பிரசித்தம். அந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள் விலையை சொல்கிறார்கள். ஒரு மனிதனின் உடலில் 7 பார் சோப்புகளை தயாரிக்கும் அளவுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. ஒரு சிறிய ஆணியை செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு இருக்கிறது. 5 அடிக்கு 5 அடி பரப்புளவு உள்ள 25 சதுர அடி சுவருக்கு மனிதனின் உடலில் உள்ள சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கலாம்.யாரைப்பார்த்தாலும் சர்க்கரை நோய் என்று ஓடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சர்க்கரை தொழிற்சாலையே வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம்தான். மனிதனின் உடலில் இருக்கும் சர்க்கரையைக் கொண்டு இரண்டு கப் காபியை மட்டுமே இனிப்பாக்க முடியும். பாஸ்பரஸ் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்த பாஸ்பரசை கொண்டு 2 ஆயிரம் தீக்குச்சிகள் தயாரிக்கலாம். மேலும் ஒரு சின்ன கரண்டியளவே மக்னீசியமும் உடலில் உள்ளது. இதுபோக ஒரு சின்ன பீரங்கிக் குண்டை வெடிக்க வைக்கும் அளவுக்கு தேவையான பொட்டாசியம், கொஞ்சம் கந்தகமும் உள்ளது. சரி இத்தனையும் விற்றால் என்ன விலை தேறும் என் கிறீர்களா? ரொம்ப சொற்பம்தான். இத்தனையும் சேர்த்து 100 ரூபாய்க்குள் தான் வருகிறது. அந்த வகையில் மனிதனைவிட விலங்குகள் அதிக விலை பெறுகின்றன. மனிதனின் மதிப்பு அவனது மூளைதான். அந்த சின்ன மூளையை வைத்துத்தான் மனிதன் உலகில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். அந்த மூளை விலை மதிப்பற்றது.

சீனப் பெருஞ்சுவர்


பழைய உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது சீனப் பெருஞ்சுவர். இந்த பூமியில் மனிதனால் கட்டப்பட்ட மிக மிக நீளமான சுவர் இதுதான். இந்த சுவர் இன்று நேற்று கட்டப்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவில் தொழில்நுட்பம் வளரவில்லை. அப்போதே இப்படியொரு பிரமாண்டத்தை படைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று அதிசயிக்கிறார்கள், வரலாற்று ஆசிரியர்கள்.நீண்டு உயர்ந்த மலைகள், மணற்பாலைவனங்கள், பள்ளத்தாக்குகள் என்று சுவர், பயணம் செய்யும் பகுதிகள் ஏராளம். சீனப்பெருஞ்சுவரின் நீளம் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர். கிழக்கில் ஷான்ஹாயில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வழியாக தென்பகுதியான மங்கோலியாவின் உட்பகுதி வரை நீண்டு செல்கிறது.இந்த சுவர் ஒரு அதிசயமாக இடம் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்படவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சீனாவுக்கு எப்போதும் எதிரிகளால் ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. திடீர் திடீரென்று யாராவது கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு குதிரை மீது ஏறி சண்டைக்கு வந்து விடுவார்கள். சீன மன்னர்களுக்கு இது ஓயாத தலைவழியாக இருந்தது. இதை எப்படி சரி செய்வது? என்று யோசித்தார்கள். கடைசியாக அரண்மனை போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ள அரண்போல் ஒரு கோட்டைச் சுவரை எழுப்புவார்கள். அதே போன்ற சுவர் ஒன்றை எல்லைப்பகுதியில் கட்டி விடுவது என்று முடிவெடுத்தார்கள். உடனே வேலையில் இறங்கினார்கள்.கி.பி.206-ம் ஆண்டு முதலாம் சின்வம்சத் அரசன் இதைக் கட்ட தொடங்கினார். ஒரு வருடம், இரண்டு வருடம் என்று இழுத்துக் கொண்டே போன பணி 15 வருடங்கள் கழித்து நிறைவடைந்தது. குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இந்த பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட நாட்டில் இருந்த மொத்த மக்களில் 70 சதவீதம் பேர் சுவர் கட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். கி.பி. 221-ல் 5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சுவரை கட்டி முடித்தனர். இதற்கு வான்-லி- குவாங்-கெங் என்று பெயரிட்டனர். அதற்கு 5 ஆயிரம் கி.மீ. நீளமான சுவர் என்று அர்த்தம். இதன் அகலம் 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இருந்தது. உயரம் 7.5 மீட்டர் முதல் 14 மீட்டர் வரை இருந்தது. இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் அவர்களுக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை.சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்தார்கள். 1368-ல் இருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள். 6 ஆயிரத்து 400 கி.மீ. வரை நீண்டது. இந்த சுவரில் மறு சீரமைப்பு பணி தொடங்கியது. இதுவே 200 ஆண்டுகள் வரை நீடித்தது.இந்த சுவர் சீனாவின் அடையாளம். இதைப்பார்க்க நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள். தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருக்கும் மட்டியான்யு மற்றும் சைமைதாயு என்ற இரண்டு இடங்களில் மட்டுமே பார்வையாளர்கள் சீனப்பெருஞ்சுவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள சுவர்கள் எல்லாம் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கெல்லாம் சுற்றிப்பார்ப்பதற்கு என்று சுவரை நெருங்கினாலே உயிருக்கு ஆபத்து.சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கும் அறைகள் கட்டப்பட்டன. ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகைபோட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.

மின்னல் மின்சாரம்


வாழ்க்கையில் 2 வருடம் பள்ளிக்கு சென்றதோடு சரி. அதன்பின் மழைக்காகக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் பெஞ்சமின் பிராங்க்ளின். ஆனால் இவர் கணக்கு, இலக்கணம் கற்று ஒரு சிறந்த அரசியல்வாதியாக, பொதுநல ஊழியராக, விஞ்ஞானியாக, வியாபாரியாக இருந்து சாதனை படைத்தவர். அமெரிக்காவில் டாஸ்ட்டன் நகரில் ஒரு மெழுகுதிரி தொழிற்சாலை நடத்தி வந்தவருக்கு 17 குழந்தைகள் இருந்தன. அதில் 15-வது குழந்தையாக பிறந்தவர் தான் பிராங்க்ளின். இவர் 1706-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி பிறந்தார். வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் நிறைய புத்தகங்களை படித்தார். சில நேரங்களில் சாப்பாட்டுக்காக வைத்திருந்த பணத்தில் கூட புத்தகங்களை வாங்கிப் படித்தார். படிப்பறிவோடு எழுதும் ஆற்றலும் பிராங்க்ளினுக்கு உண்டானது. பிராங்க்ளின் 1753-ம் ஆண்டு அமெரிக்க காலனிகளின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகவும் வேலை பார்த்திருக்கிறார். தபால் இலாகாவில் சீர்திருத்தங்கள் செய்து, வருமானம் தரக்கூடிய இலாகாவாக மாற்றியமைத்தார். 1847-ல் அமெரிக்கா முதன் முதலாக ஸ்டாம்புகள் வெளியிட்ட போது பிராங்க்ளின் உருவம் பொறித்த ஸ்டாம்புகளை வெளியிட்டு கவுரவப்படுத்தியது.பிராங்க்ளின் தான் நூலகம் என்ற ஒன்றை முதன் முதலாக உருவாக்கினார். அரிய நூல்களை பலரும் படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தீவிபத்தினால் ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்தார். இவர் தோற்றுவித்த பென்சில்வேனியா கல்லூரியானது, பிற்காலத்தில் பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. விஞ்ஞான ஆராய்ச்சியிலும் பிராங்க்ளின் கவனம் செலுத்தினார். தனது 42-வது வயதில் நல்ல பொருளாதார நிலையை அடைந்ததும் வியாபாரத்தில் இருந்து விலகி, பொதுநல சேவைக்காக தன் வாழ்நாட்களை செலவிட நினைத்தார்.மின்னலில் மின்சாரம் உள்ளது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார். இடிதாங்கியை கண்டுபிடித்தார். மின்சாரத்தை கம்பி மூலம் வேறு இடத்துக்கு அனுப்ப முடியும் என்ற உண்மையை உலகத்திற்குச் சொன்னவர், இவர் தான். பசியின் கொடுமையை அறிந்தவன், உணர்ந்தவன் தான் அறிவாளியாக முடியும் என்று சொன்னவர், பிராங்க்ளின். அவர் சொன்னது போலவே வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது அயராத உழைப்பால் உலகம் போற்றும் மேதையானார். மனிதனாக பிறந்தவன் சிந்திக்க வேண்டும். சிந்திப்பவன் தான் மனிதன் என்ற கொள்கை உடையவராக விளங்கினார், பிராங்க்ளின். 1790 ஏப்ரல் 17-ந்தேதி அவர் மண்ணுலகை நீத்தார். போர் என்பது அமைதியான வாழ்வை சீர்குலைத்து அழிவினை தேடித்தருகிறது. எனவே சமுதாயம் அமைதியாக வாழ சமாதானமே சிறந்த வழி என்ற உண்மையை உலகநாடுகளுக்கு உணர்த்திய பிராங்க்ளினின் பெயர் சரித்திரத்தில் என்றென்றும் அழியாப்புகழுடன் விளங்கும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

பீர் குடிக்கும் பெண்களுக்கு தோல் நோய் ஏற்படலாம்


பீர் குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பீர் குடிக்கும் பெண்களை இந்த நோய் தாக்கும் அபாயம் 70 சதவீதம் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்கமாக பீர் குடிக்கும் பெண்களுக்கு சோரியாசிஸ் என்ற நோய் தாக்குகிறது. இந்த நோய் காரணமாக தோலில் தடிப்பு ஏற்படுகிறது. தோல் சிவந்து போகிறது. இது மொத்த மக்கள் தொகையில் 2 முதல் 3 சதவீத பெண்களை தாக்குகிறது.ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 1991-ம் ஆண்டு 82 ஆயிரத்து 869 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், பீர் குடிக்கும் பெண்களுக்கு அதை குடிக்காத பெண்களை விட சோரியாசிஸ் நோய் தாக்கும் அபாயம் 72 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த குட்டிகள்



தைவான் நாட்டில் உள்ள தைனான் என்ற இடத்தில் உள்ள தனியார் மிருகக்காட்சி சாலை ஒன்றில் சிங்கத்துக்கும். பெண் புலிக்கும் ஏற்பட்ட உறவில் பிறந்த குட்டிகளை படத்தில் காணலாம். இவற்றை Ôலைகர்Õ என்று அழைக்கிறார்கள். பெண்புலி 3 குட்டிகள் போட்டது. அவற்றில் ஒன்று இறந்து விட்டது. மீதி 2 குட்டிகள் தூங்கும் காட்சியை தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த குட்டிகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் அந்த மையத்துக்கு சாரை சாரையாக சென்றபடி இருக்கிறார்கள்.

வைரம்


வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை; விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன.
உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது. மற்ற எல்லா ரத்தினங்களை விடவும், வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு.
தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும், ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால், அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது.
பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன. ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில், இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

காமிராவின் தொடக்கம்


இன்று காமிரா என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. மொபைல் போன்களில் கூட தரமான காமிராக்கள் வந்துவிட்டன. டிஜிட்டல் என்ற ஒன்று உருவானபின்னர் ஏற்பட்ட வளர்ச்சிதான் இது. காமிராவின் வளர்ச்சி 1578ல் இருந்து தொடங்குகிறது.
ஜியாபாட்டிஸ்டா டெலலாபோர்டா என்பவர்தான் முதல் காமிராவான அப்ஸ்க்யூராவை உருவாக்கியவர். அதை ஊசி ஓட்டை காமிரா என்று அழைத்தனர்.
ஆரம்பகால காமிராக்களை உருவாக்கியதில் ஓவியர்களுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. தங்கள் முன் தெரியும் காட்சியை தத்ரூபமாக வரைவதற்காக அவர்கள் காமிராவை பயன்படுத்தினார்கள்.
காமிராவின் சிறிய துளை மூலம் ஊடுருவி வரும் ஒளியை ஒரு டிராயிங் பேப்பரில் விழச்செய்து அதை அப்படியே ஸ்கெட்ச் செய்து கொள்வதில் ஆரம்பித்தது தான் காமிராவின் கதை.
1814ல் பிரான்ஸ் நாட்டில் முதல் போட்டோ மரப்பெட்டி காமிரா மூலம் எடுக்கப்பட்டது. நாம் பார்க்கும் காட்சியை ஒளியில் பதிவு செய்து நிழற்படமாக மாற்றிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் காமிரா.
போட்டோகிராபி என்ற ஆங்கிலச்சொல், போட்டோஸ் மற்றும் கிராபி என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. இதில் போட்டோஸ் என்பது ஒளியையும், கிராபி என்பது வரைவதையும் குறிக்கிறது.
1839ல் விஞ்ஞானி சல்ஜான் எம்.வி.ஹெர்செல் என்பவர்தான் முதன்முதலாக போட்டோகிராபி என்ற சொல்லை பயன்படுத்தினார். விஞ்ஞான அடிப்படையில் போட்டோகிராபி என்பது ஒளியின் வினையால் பிலிமில் ஏற்படும் ரசாயன மாற்றத்தின் நிகழ்வையே குறிக்கும்.
தற்போது நாம் பயன்படுத்திவரும் போட்டோகிராபி முறையை அறிமுகப்படுத்தியவர் ஜாக்ஸ்மோர்ட் டாகுரி என்பவர். பெயிண்டரான டாகுரி ஜொசர் நிக்கோபர் நிப்ஸ் என்பவருடன் இணைந்து 1829ல் காமிராவுக்கு நிலையான இறுதி வடிவம் கொடுத்தார். பலவருட ஆராய்ச்சிக்குப்பின் இது சாத்தியமானது. இதற்கு டாகுரியோ டைப் என்றே பெயர் வைக்கப்பட்டது. இது மிகவும் பிரபலமானது.
1884-ல் டபிள்யூ. எச்.வாக்கர் என்பவர் காமிராவுக்கான ரோல் பிலிமை கண்டுபிடித்தார். ஜார்ஜ் ஈஸ்ட்மென் 1888ல் அதை வியாபாரம் செய்தார். 1889ல் கோடாக் பாக்ஸ் காமிரா அறிமுகமானது. இந்த காமிராவில் 100 படங்கள் எடுக்கும் அளவிற்கு பிலிம் லோடு செய்யப்பட்டிருக்கும். படம் எடுத்தபின் காமிராவை தூக்கிக்கொண்டு கோடாக் கம்பெனிக்கு போக வேண்டும். அவர்கள் அந்த பிலிமை தனியாக இருட்டறையில் எடுத்து புதிதாக 100 படங்கள் எடுக்கும் விதத்தில் புதிய பிலிமை மாற்றி கொடுப்பார்கள்.
ஜார்ஜ் ஈஸ்ட்மென் நிறைய மாடல்களை காமிராவில் அறிமுகப்படுத்தினார். மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய போல்டிங் காமிராவும் அதில் உண்டு. எட்வின் லேண்ட் என்பவர் 1948ல் முதல் போலராய்டு காமிராவை உருவாக்கினார். காமிராவுக்குள்ளேயே படங்களை டெவலப் செய்யும் வசதி அதில் இருந்தது. எடுத்த படத்தை சில நொடிகளில் பார்க்க முடிந்தது.
கோடாக் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு காமிரா டிஸ்க் என்ற வகையை அறிமுகப்படுத்தியது. அதில் பிலிம் கிடையாது. எடுத்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் தான் பார்க்க முடியும், பிரிண்ட் போட முடியும். இன்றைய டிஜிட்டல் காமிராக்களுக்கு அதுவே முன்னோடி எனலாம்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

இந்திய மக்கள் தொகை


மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. சில மாநிலங்களில் நடந்து வருகிறது. உலக பரப்பளவில் 2.4 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பு கொண்டுள்ள இந்தியா உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தை பெற்றுள்ளது. 2000ம் ஆண்டு மே மாதம் இந்திய மக்கள் தொகை 100 கோடியை கடந்துவிட்டது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகை 102 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து436. ஆண்கள் 53 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 90. பெண்கள் 49 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 346 பேர். ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர். ஒரு சதுர கி.மீ.க்கு 325 பேர் வசிக்கின்றனர். 64.89 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872&ல் நடத்தப்பட்டது. இருப்பினும் 1881&ல் தான் முழுஅளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போதைய ஆங்கிலேய வைசிராயான ரிப்பன் பிரபு தான் இதனை நடத்தினார். அப்போது பிளிண்டன் என்பவர் இந்தியாவின் முதல் சென்சஸ் கமிஷனராக இருந்தார்.
1881 முதல் 1941 வரை சென்சஸ் கமிஷனரே மக்கள்தொகை கணக்கெடுப்பு பொறுப்பு வகித்தவர். 1949 முதல் இந்த பொறுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனரிடம் மாற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனராக இருந்தவர் எம்.டபிள்யூ.எம்.யேட்ஸ். இந்த பதவிக்கு வந்த முதல் இந்தியர் ஆர்.ஏ.கோபால்சாமி. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9&ந் தேதி மக்கள்தொகை தினமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 82 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 868 இந்துக்கள் உள்ளனர். 13 கோடியே 81 லட்சத்து 88 ஆயிரத்து 240 பேர் முஸ்லிம்கள். 2 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரத்து 16 பேர் கிறிஸ்துவர்கள். 69 லட்சத்து 601 பேர் பார்சிகள்.
இந்தியாவில் 23 மாநிலங்கள், 5 மத்திய ஆட்சி பகுதிகள் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் இந்துக்களே அதிகம் உள்ளனர். ஜம்மு&காஷ்மீர், லட்சத்தீவுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா போன்ற பகுதிகளில் கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ளனர்.
பஞ்சாபில் சீக்கியர்கள் பெருமளவில் உள்ளனர். நாட்டில் அதிகமாக கிறிஸ்துவர்களை கொண்ட மாவட்டம் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் ஆகும். அதிகமான முஸ்லிம்கள் உள்ள மாவட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம் ஆகும்.
தாழ்த்தப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலம் பஞ்சாப். இங்கு 28.9 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளனர். பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலம் மிசோரம். இங்கு 94.5 சதவீதத்தினர் பழங்குடிகளே. மத்திய ஆட்சிப்பகுதிகளில், சண்டிகர் 17.5 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. பழங்குடியினரை அதிகம் கொண்ட மத்திய ஆட்சிப்பகுதி லட்சத்தீவு. இங்கு 94.2 சதவீதத்தினர் பழங்குடியினர்.

சுறா


மீன்களில் கிட்டத்தட்ட 1,500 வகைகள் உள்ளன. இந்த மீன்களில் மிகவும் பெரியது திமிங்கல சுறா. இது 21 மீட்டர் நீளம் வரை வளரும். இதுதான் மீன்களிலேயே வேகமாக நீந்தக்கூடியது. 45 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இரையை அப்படியே விழுங்கிவிடும். பசி நேரம் என்றால் 91 கிலோ எடை கொண்ட ஆமையைக்கூட தின்றுவிடும்.
கடலில் வாழும் பெரிய உயிரினங்களை கொன்று தின்பதுதான் இதன் பொழுதுபோக்கு. காட்டில் புலி எப்படியோ அது போன்று கடலில் சுறா. அதனால் தான் இதற்கு கடற்புலி என்று பெயர்.
தனது வலிமையான வாலால் இரையை அடித்து வீழ்த்தும். எப்போதும் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டே சிக்கிய மீன்களை எல்லாம் விழுங்கிக்கொண்டே போகும்.
சுறாமீன்களின் உட்கூடு குருத்தெலும்பால் ஆனது. தாய்சுறாவின் கருப்பையில் இருந்து குட்டிகள் வெளி வருகின்றன. சுறாக்களில் மிகவும் கொடூரமானது வெண்சுறா. இது சுமார் 12 மீட்டர் நீளம் கொண்டது. இதை விட பெரிய சுறாவும் உண்டு. வெண் சுறாவை விட பெரிதான புலி போல் வரிகளை கொண்ட புலிசுறா மகா சாது. இது முட்டைகளை ஜவ்வினால் ஆன ஒரு பைக்குள் இட்டுவைக்கிறது. அந்த பையை தாவரங்களுக்கு இடையே போட்டுவிட்டு போய்விடும். கொஞ்ச நாட்களில் முட்டை பொரித்து குஞ்சுகள் ஜவ்வுப்பையை கிழித்துக்கொண்டு வெளியே வரும்.
பெரிய கண்களும், அகலமான மூக்கும், தட்டையான தலையும் கொண்டது, ‘கொம்பன்சுறா‘. உடலை விட இரண்டு மடங்கு நீளமான வாலை கொண்டது. போர்சுறா என்பது 2 மீட்டர் நீளம் உடையது. இவை ஒன்று சேர்ந்தால் பெரிய திமிங்கலங்களைக்கூட ஓடஓட விரட்டும். இதுபோக வள்ளுவன் சுறா, பால்சுறா போன்றவையும் உள்ளன.
சுறாவின் கல்லீரலில் இருந்துதான் மீன் எண்ணை எடுக்கிறார்கள். சுறாக்களில் அதிகமாக மனிதனுக்கு பயன்படுவது இரிளோடான் சுறா. இதன் தோலில் இருந்து மணிபர்ஸ் தயாரிக்கப்படுகிறது.

புதன், 24 மார்ச், 2010

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தந்தை- மகள்


நாகை மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் சீர்காழி நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் சுபஸ்ரீதேவி (15), சீர்காழி அருகே உள்ள வடகால் ரஹ்மானியா உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
9-ம் வகுப்பு வரை படித்துள்ள மாரிமுத்து, சாலை பணியில் உயர்பதவி அடைய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நினைந்தார். இதனையடுத்து மாரிமுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்தார். பின்னர் அவருக்கு தேர்வு எழுத அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து 24-ந்தேதி தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாரிமுத்து சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திலும், மகள் சுபஸ்ரீதேவி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு எழுதினர்.

ஞாயிறு, 14 மார்ச், 2010

ராம அவதார‌ம்


தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.

தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.

தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.

விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார்.
தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.

பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டுவந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.

மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.

கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாத தசரதன் உயிர் துறந்தான்.

கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய ஈமக்கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான்.

காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அது வரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.

இராவணன் என்னும் அரக்கன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான்.

சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லவில்லை. `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்துவிட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தினான். அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.

இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான்.
திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர். சுக்ரீவன் குரங்குகளுக்கு அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான்
சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர்.
இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத்தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து பணிவுடன் சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் அணைகட்டின. அவ்வணையின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்துவிட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டு விட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர்.
கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர் : இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான்.
இராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக்கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

திருப்பதி அதிசயங்கள்



பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன..அவைகளில் சில...
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றனதிருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்
22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.


நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம்(செப்டம்பர் 2009)

புதன், 24 பிப்ரவரி, 2010

புலி வருது






இந்தியாவில் 1400 புலிகள் மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, புலிகள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், கொல்கத்தா அருகே குடியிருப்பு பகுதியில் ஒரு பெண்புலி பிடிபட்டது. பின்னர், அதை சுந்தரவன காட்டுக்குள் திறந்து விட்ட காட்சியை படத்தில் காணலாம்.