திங்கள், 14 செப்டம்பர், 2020

தீராத நோயை தீர்க்கும் துர்கை காளியம்மன்

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில் பிரசித்தி பெற்ற துர்கை காளியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கணபதி, கட்டு முனியப்பன், முத்து முனியப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

துர்கை காளியம்மன்

இயற்கை எழில் சூழ்ந்த நகரமலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி துர்கை காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நித்திய பூஜைகள் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.
சிம்ம வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் துர்கை காளியம்மன் சாந்த ரூபிணியாகவே பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில்  அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

நெய் தீபம்

தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்கை காளியம்மனுக்கு புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். மேலும் தொழில் வளம் பெருகவும், திருமணத்தடை அகல மற்றும் குழந்தைப் பேறு கிடைக்க அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள்.
இதேபோல் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் துர்கை காளியம்மனுக்கு புடைவை, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குவதுடன் பொங்கல் வைத்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். 

திருவிழா

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். அப்போது மேளதாளம் முழங்க மாவு விளக்கு மற்றும் முளைப்பாரியை ஏந்தி பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் துர்கை காளியம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
இந்த விழாவில் அழகாபுரம், பெரியபுதூர்  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து செல்வார்கள். தற்போது இந்த கோவில் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
------------------------------
சிறப்பு அலங்காரத்தில் துர்கை காளியம்மன்
-----------------------------------

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.
---------------


திங்கள், 17 ஆகஸ்ட், 2020

என் வீட்டு அழகி "அம்மா"

"ப்ளீஸ்" என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா.. ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!! கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்.. இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..* *எப்ப பாரு என்ன டிவி?* *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை.. நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு சென்றது.. இன்று *சாம்பார் சூப்பர்,* *வத்தக்குழம்பு சூப்பர்* என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின் பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது! மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற ஆரம்பித்தது.. *இதிலும் நான்தான் தோற்று போனேன்*. இருந்தாலும் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது.. அப்போதுதான் *நூடுல்ஸ் வந்த புதிது..* அதன் மீது அப்படி ஒரு பிரியம் வந்துவிட்டது.. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என் அம்மா கறார்தான்.. தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்.. *உங்க சமையல் வெறுப்பா இருக்கும்மா, நூடுல்ஸ்தான் வேணும்* என்று அழுதாலும் ஒரு பதிலும் அங்கு வரவே வராது.. 5 ரூபாய் தராத அம்மா எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன். மறுநாள் காலை தூங்கி எழுந்தால், வீட்டுக்கு வந்த பாத்திர வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது பாத்திரங்கள் கண்ணை கூசின. *ஆமா.. எல்லா பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..* செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்.. இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை குத்தி காட்டி கொண்டே இருக்கிறது. *ஏனோ தெரியவில்லை, இப்போதுவரை நூடுல்ஸ் சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை*. இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று போனேன்!! ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக், அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது. நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது, குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே.. இதை சாப்பிடு அதை சாப்பிடாதே இதை குடி இப்படி திரும்பு அப்படி படு, குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு என்று சொல்லி கொண்டே இருந்தார். அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்.. பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது.. அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்.. நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!! *இப்போதும் நான்தான் தோற்றேன்!* என் மகள் குட்டி தேவதை போலவே இருப்பாள் என்று கற்பனை செய்து கொண்டு, தையல் மிஷினில் கைத்தறி துணியில் பாவாடை தைத்து உடுத்தி அழகு பார்க்கும்போதுகூட, எனக்கு கண்ணில் பட்டது என்னவோ அதில் தொங்கி கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருந்த கலர் கலர் நூல்கள்தான்.. "இந்த டிரஸ் நல்லா இல்லைம்மா, நூல் நூலா தொங்குது.. இதை பார்த்தா என் பிரண்ட்ஸ் கிண்டல் செய்வாங்கன்னு" தைத்த 2 நிமிசத்துலயே கழற்றி முகத்தில் எறிந்த நிகழ்வின் காலம் உருண்டாலும் இன்னமும் வலித்து கொண்டே இருக்கிறது. "இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா, என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன். ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய் *ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்.. *தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை* என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று? அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல் *அப்போதும் நான்தான் தோற்று நிற்பேன்!!* எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!! *உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே* சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!! உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!! *எத்தனை இடர்பாடுகள்*, *எத்தனை துயரங்கள்,* *எத்தனை வலிகள்* வந்தால் என்ன? உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!! எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பனம்!!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தீராத வினைகளைத் தீர்க்கும் காரையடி சுடலைமாடன்

 சசிரேகா தங்கதுரை- காயாமொழி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காரையடி சுடலைமாடன் கோவில் அமைந்துள்ளது.

குழந்தைப்பேறு


இந்தக்கோவிலில் சுடலைமாடன், முண்டன்சாமி, பிரம்ம சக்தி, பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், இசக்கியம்மன், செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும். 
மூலவரான காரையடி சுடலைமாடன், கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத வினைகள் தீருவதுடன், குழந்தைப்பேறு கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன், தொழில்வளமும் பெறுகும்.

தல வரலாறு


பார்வதி தேவி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கிறார். சிவன் கைலாயத்தில் உள்ள 32-வது தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறார். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவரிடம் கூறுகிறார். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறார்.
அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு (சுடுகாடு)சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. இதனால் அந்த குழந்தைக்கு சுடலைமாடன் என பெயர் வந்தது. பின்னர் சுடலைமாடன்  பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறார்.

மயான வேட்டை

அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவரை வைத்துக்கொள்கிறார் பகவதி. மேலும் அவளது கோவிலின் ஈசான மூலையில் உள்ள ஏழு கடாரம் தங்கத்தைக் காவல் காக்கும் பொறுப்பையும் சுடலைமாடனிடம் ஒப்படைத்தார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச்‌‌ செல்வதும், அன்னையின் புதையலுக்குக் காவல் இருப்பதுமாகத் தனது நாட்களைக்கழித்து வந்தார் சுடலைமாடன்.
மலையாள தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊர் இருந்தது. அங்கு காளிப் பெரும்புலையன் என்ற மந்திரவாதி வாழ்ந்து வந்தான். அவனது மனைவி புலக்கொடியாள். இவர்களு‌டைய ‌மகள் மாவிசக்கி மிகுந்த அழகுடன் விளங்கினாள்.

தங்கப் புதையல்


தன்னுடைய 12-ம் வயதில் மாவிசக்கி பருவமெய்தினாள். தன்னிடமுள்ள ஆபரணங்களால் மகளை அலங்கரித்து மகிழ்ந்தான் காளிப் பெரும்புலையன். இன்னமும் தன் மகளுக்குப் பொன்னால் நகைகள் செய்து போட்டு அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் உதித்தது. இதனைதொடர்ந்து அஞ்சனமை போட்டு தங்கப் புதையல் எங்கே கிடைக்கும் என்று அவன் பார்க்கும் போது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் பொன் புதையலாக இருப்பதை அறிந்தான்.
எனவே அதனைக் கொள்ளையிட வேண்டும் என்று முடிவு செய்ததான். மாயாண்டி சுடலைமாடன் காவல் இருப்பதைக் கண்டு அஞ்சி, இவன் இருக்கும் போது நம்மால் கொள்ளை செய்ய இயலாது என்று எண்ணிக் காத்திருந்தான்.
வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பினார். அவர் கிளம்பியதும், காளிப்புலையன் உள்ளே சென்று ஒருகடாரம் பொன்னை கொள்ளையடித்து சென்றான்.

சிமிலில் அடைத்து விடுவான்‌

மயான வேட்டைக்குச் சென்ற சுடலை ஈசன் திரும்பி வந்தார். தன் காவலில் இருந்த ஏழுகடாரம் தங்கத்தில் ஒரு கடாரம் குறைந்ததைக் கண்டதும் கோபமுற்றார். யார் இந்த பாதகத்தைச் செய்தார்கள் என்று எண்ணியவாறே அன்னை பகவதியாளிடம் சென்றார். "அம்மா... நான் மயான வேட்டைக்குச் சென்றிருக்கும்போது யாரோ உன் கோவிலில் வந்து கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றார்கள். யாரது?" என்று கேட்டார்.
அன்னை பகவதியும் மகனே.. நந்தம்புனலூரிலுள்ள காளிப்பெரும்புலையன்தான் இதனை செய்தது.
"பொன் போனால் போகிறது.. என் மகனே நீ என்னை விட்டுப் போகவேண்டாம். அவன் உன்னைப்பிடித்து சிமிலில் அடைத்து விடுவான்" என்றாள் அன்னை பகவதி..
"அம்மையே.. உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? தில்லைவன மயானத்தில் பிறந்த என்னை எந்த மாயசக்தியாலும் எதுவும் செய்ய முடியாது... நீ ஒருவார்த்தை மட்டும் சொல். என் காவலிலிருந்த பொன்னைக் கொள்ளை செய்தவன் குடும்பத்தை அழித்து மண்ணோடு மண்ணாக்கி விட்டு வருகிறேன்.." என்று முழங்கினார் சுடலை.. இனியும் தன் மகனைக் கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அன்னை பகவதியும் அவனுக்குத் திருநீற்றைப் பூசி வல்லயத்தைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

பாம்பாட்டி

பாம்பாட்டியாக உருவம் கொண்டார்.. கானகத்தில் தான் பிடித்த பாம்புகளைக்கொண்டு நந்தம்புனலூர் வந்தடைந்தார். பாம்புகளைத் தெருவில் விட்டு வித்தை காட்டிக் கொண்டிருந்தார். காளிப்புலையன் வீட்டிலிருந்து யாரும் வந்து பார்க்கவில்லை.. ஆனால் காளிப்புலையனின் மகள் மாவிசக்கி தன் வீட்டின் மாடியில் நின்று இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டார் சுடலை.. இவளுக்காகத்தானே அந்தத் திரவியத்தைக் களவெடுத்தான் பெரும்புலையன். எனவே முதலில் இவளைப்பழிவாங்க வேண்டும் என்று எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன் வீட்டுக்கு வந்து கையேந்தி பிச்சை கேட்டார். பின்னர் மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறார். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாவிசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொடை விழா



இந்த நிலையில் காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகிறான். அப்போது எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று கேட்டார் சுடலைமாடன்.
"என்ன வேண்டுமானாலும் தருகிறேன்.." என்றான் புலையன்.
"ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம் வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில் செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே படைப்பாகவும் போட வேண்டும்" 
"அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. "
"அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப்பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார். மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார்.

நிறைமாத கர்ப்பிணி

இதில் மயங்கிய  பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும் கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம் என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன். வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான்.
"மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகிறேன்.. நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான். "அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. பலி கொடுப்பதையெல்லாம் நான் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள். அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான். ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான்.
மாவிசக்கியும் புரிந்து கொண்டாள். "அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்" என்று சாபமிட்டு அழுதாள்..

சிமிழில் அடைப்பு

அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன். அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக்கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார். பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்... சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோவிலில் உள்ள அனைத்துத் தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான்.
குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பி தனது வீட்டுக்கு வந்தான்.. புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்.. புலையனுக்கு சாப்பாடு வைத்தாள். குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள். நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது. "ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில் மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது. சிமில் வெடித்தது..
ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி.. "அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா? என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன் என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை அடித்தார்... மேலும் அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்.. இதில் அவர்கள் 2 பேரும் இறந்தனர்.
தன் அன்னையின் கோவிலில் இருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற பொன்னை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார். அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார் சுடலைமாடன்.

திருவிழா

காரையடி சுடலைமாட சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவைக் காண சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவையொட்டி  ரைஸ் மில் அருகே உள்ள பலவேசம் முத்து சாமிக்கு திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பலவேசம் முத்துகோவிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் மேள தாளங்களுடன் செல்வார்கள். பின்னர் அங்குள்ள குளம் மற்றும் கிணற்றில் குளித்துவிட்டு அருஞ்சுனை காத்த அய்யனார் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள்.
அதன்பின்னர் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். நண்பகல் 12 மணியளவில் பலவேசம் முத்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பிறகு சுவாமிக்கு படைக்கப்பட்ட படக்கஞ்சி, பானகாரம் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

கணியான் கூத்து

பலவேச முத்து கோவிலில் இரவு 9 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும். அதன்பிறகு முளைப்பாரியை சுற்றி பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடுவார்கள். அதனைத் தொடர்ந்துமேளதாளத்துடன் சுடலைமாட சுவாமி கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்குள்ள பேச்சி அம்மன் முன்பு முளைப்பாரி வைக்கப்படும். முன்னதாக சுவாமி வரலாற்றைக் கூறும் விதமாக கணியான் கூத்து நடைபெறும். இதனை திரளான பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள்.
சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள், பேச்சியம்மன், பிரம்மசக்தி, இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆளுயர மாலைகளும், எலுமிச்சை மாலை, வாழைத்தார், தேங்காய், பழம், பனியாரம் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

அருள்வாக்கு

அதனைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஐயம்பந்தி, செங்கடசாமி, சிவனந்த பெருமாள், வயணப்பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பேச்சியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கு செங்கிடா, பன்றி, கோழி ஆகியவை பலியிடப்படும். அதன் பின்னர் சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தலை வாழை இலையில் ஆடு, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன் பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருளை பெற்று செல்வார்கள்.
--------------------------------

நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன ஐகோர்ட்டு மகாராஜா



தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் வசித்து வந்த செல்லையா சுடலைமாடனின் தீவீர பக்தன். தனக்கென்று ஒரு வீடும், சிறிய அளவில் நிலமும் வைத்திருந்தார். நிலத்தின் வரப்பு பிரச்சினையில் 3 பேரிடையே தகராறு இருந்து வந்தது. அதில் இவரது 3-ம் சொக்காரன் என்ற உறவில் தம்பி முறை வரும் ஆண்டி என்பவருக்கும், பக்கத்து நிலத்துக்காரர் சின்னத்துரை என்பவருக்கும் தகராறு ஏற்படுகிறது.
‌இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, ஆண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பி செல்கிறார். அந்த நேரம் வயலுக்கு வந்த செல்லையா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண்டியை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனைதொடர்ந்து செல்லையாவை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கு நெல்லையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அந்த காலத்தில் தாலுகா கோர்ட்டு, ஜில்லா கோர்ட்டு என்று அழைத்து வந்தனர். ஜில்லா கோர்ட்டை உயர்ந்த கோர்ட்டாக கருதி, அதை பேச்சு வழக்கில் ஐகோர்ட்டு என்பர். முதல் நாள் வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த செல்லையா, ‘‘ஐயா, நான் பழி, பாவங்களுக்கு அஞ்சுபவன். என்னை தாயாய், தந்தையாய் காப்பவரான அந்த சுடலைமாடன் நிலை கொண்டிருக்கும் கோவிலின் நேர் கிழக்கு பக்கம்தான் இந்தச் சம்பவம் நடந்தது.  அதனால் அவருக்குத்தான் எல்லாம் தெரியும்’’ என்றார்.  உடனே நீதிபதி, அப்படி என்றால் அவர் வந்து சாட்சி சொல்வாரா? என்று கேட்க, நீதிமன்ற அவையில் இருந்த அனைவரும் சத்தமாக சிரித்தனர். நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும். என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.
இதனிடையே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற சின்னத்துரை, நாகம் தீண்டி, ஆண்டி இறந்த இடத்திலேயே இறந்து விடுகிறான். வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள் இரவில் நீதிபதியின் கனவில் ‘‘மேல் சட்டை இல்லாமல் தலையில் தலைப்பாகை கட்டியவாறு வெள்ளை வேட்டியுடன் வந்த ஒருவர், ஆண்டியை கத்தியால் குத்தி சின்னத்துரை கொன்றதாகவும், செல்லையா குற்றம் செய்யாதவர்’’ என்பதையும் கூறினார். மறுநாள் காலை விடிந்தது. இரவில் ஒரு விசாரணை தொடர்பான கனவை கண்டதில் வியப்பும், குழப்பமும், நம்ப முடியாத நிலையும் கொண்டு, அன்றைய தினம் நீதிமன்றம் வந்தார், நீதிபதி.
விசாரணை தொடங்கியது. அப்போது கோர்ட்டு வளாகத்திலிருந்து விரைந்து வந்த காவலர்கள், ஐயா, ஆண்டி கொலை வழக்கு தொடர்பாக, சாட்சி சொல்ல ஒரு ஆள் வந்திருக்கிறார் என்றதும், வரச் சொல்லுங்கள் என்றார் நீதிபதி. வெள்ளைக்குதிரையை விட்டு வந்திறங்கிய வாட்ட சாட்டமான தேகம் கொண்ட அந்த நபர் முறுக்கு மீசையுடனும், மேல்சட்டை அணியாமல், வெள்ளை வேட்டியுடன் கையில் வேல் கம்புடனும் வந்து நின்றார். சற்று திகைப்புடன் பார்த்தார் நீதிபதி. ஆம், இரவு கனவில் வந்த அதே நபர். ‘‘ம்.. என்ன, சொல்லப் போகிறீர்கள்’’ என்றார்..
தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை எடுத்து தனது இடது கைப்பக்கவாட்டில் வைத்துக்கொண்டு வணக்கம் செலுத்தி விட்டு, ‘‘ஐயா, நான் செந்தூரிலுள்ள சண்முகநாதன் பண்ணை வீட்டு காவலாளி மகாராசன், சம்பவம் அன்று ஆறுமுகமங்கலம் வழியாக வந்தபோது கொலை சம்பவத்தை கண்டேன் என்றும் செல்லையா குற்றவாளி அல்ல அவன் நிரபராதி என்றும், குற்றவாளி சின்னத்துரை நாகம் தீண்டி இறந்ததாகவும்’’ கூறினார்.
நீதிபதி திகைத்தபடியே கேட்டார். பின்னர் நீங்கள் போகலாம் என்ற கூற, மாயமானார் மாயாண்டி. அவர் நின்ற கூண்டில் ரத்தம் வடிந்திருந்தது. கோர்ட்டு காவலாளிகள் தண்ணீர் விட, அது பாலாக மாறியது. சற்று நேரத்தில் எந்த தடயமும் இல்லாமல் ஆனது. ஆனால் அந்த பகுதியில் பிச்சிப்பூ (ஜாதி மல்லி) மணம் கமழ்ந்தது. கோர்ட்டில் அனைவரும் திகைத்தனர். நீதிபதி செல்லையாவை அழைத்து ‘‘உன் சாமி பேரென்ன சொன்ன’’  செல்லையா, ‘சுடலை மாடன்’’  ‘‘ம்..ம்.. யுவர் கார்டு ஸ் கிரேட்’’ என்று கூறி, செல்லையாவை விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
ஐகோர்ட்டில் சாட்சி சொல்லி, தன்னை நம்பிய பக்தனை காப்பாற்றியதால் அன்று முதல் ஆறுமுகமங்கலத்து சுடலைமாடன் ஐகோர்ட்டு மகாராசா என்றழைக்கப்பட்டார்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

குழந்தை வரம் அருளும் சங்கிலி கருப்பராயர்

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகர், சிவக்குமார் லே அவுட்டில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கன்னிமூல கணபதி, கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. 
இந்த கோவிலின் தலவிருட்சம் அரச மரமாகும்.
குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் சங்கிலி கருப்பராயரை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
தற்போது கோவில் அமைந்துள்ள இடம் முன்பு விவசாய பூமியாக இருந்துள்ளது. மாலை நேரங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் செல்லும்போது ராஜநாகம் ஒன்று அவர்களை தண்ணீர் பாய்ச்ச விடாமல் தடுத்து உள்ளது. இதனால் பயந்துபோன விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் திரும்பி சென்றுள்ளனர். அன்று இரவு அவர்களது கனவில் தோன்றிய சங்கிலி கருப்பராயர் இப்பகுதியில் தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் சகல ஐஸ்வர்யம் தருவதுடன், வேண்டிய வரங்களை அருள்வதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கருப்பராயருக்கு கோவில் கட்டி வழிபட தொடங்கினர்.
கிழக்கு திசை நோக்கி சங்கிலிகருப்பராயர்  அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கடந்த 300 ஆண்டுகள் முன்பு இப்பகுதியில் அரச மரம் ஒன்று இருந்தது.  அந்த மரம் திடீரென்று பட்டுப்போய் கீழே விழுந்தது. இருப்பினும் அந்த மரம் சங்கிலி கருப்பராயனின் அருளால் மீண்டும் துளிர்த்து தற்போது மரமாக வளர்ந்து உள்ளது.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரி தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் கருப்பராயருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டு செல்கிறார்கள். மேலும் சாமிக்கு அரிவாள், கத்தி, சூலம், கண்மலர், நாய் பொம்மை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 9 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஆடிமாதம் அமாவாசையன்று கோவில் ஆண்டு திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மூலவருக்கு பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணியளவில் சங்கிலி கருப்பராயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதன் பிறகு 7 நாட்களுக்கு பிறகு ஆடுகள் பலியிடப்படும்.  இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து செல்வார்கள்.

குழந்தை செல்வம் அருளும் ஸ்ரீவைர முனீஸ்வரர்


-சசிரேகா தங்கத்துரை, சேலம்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் திசவிளக்கு கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கொல்லங்கரடு மலையில் ஸ்ரீவைர முனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

குழந்தை வடிவில் காட்சி...

இயற்கை எழில் சூழ்ந்த கொல்லங்கரடு மலையில் கிழக்கு நோக்கி சமயபுரத்தம்மன், ஸ்ரீவைர முனீஸ்வரர், விநாயகர், முருகர் ஆகிய தெய்வங்களும், மேற்கில் அசுரரும், வடக்கில் காமதேனு, வைர குருமணி உள்ளிட்ட தெய்வங்களும் அமைந்துள்ளனர். இதில் வைர குருமணி தனது வலது காலை தலையின் மேல் வைத்து யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மற்ற கோவில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீவைர முனீஸ்வரர்.
வாரந்தோறும் திங்கள், வெள்ளி மற்றும் பவுர்ணமி, அம்மாவாசை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் சேலம் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். பிற்பகல் 1 மணியளவில் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனைதொடர்ந்து மாலை 6 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

குழந்தைப்பேறு

தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச்செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். 
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோவிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள். மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச்செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஆடிப்பெருக்கு

இந்த கோவிலின் ஆண்டு விழா வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடிப்பெருக்கு அன்று சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக அன்று அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சித்தர் கோவிலுக்கு நடந்து செல்வார்கள். பின்னர் அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் அருவி மற்றும் கிணறுகளில் குளித்துவிட்டு பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி மற்றும் அலகு குத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவிலுக்கு செல்வார்கள்.

அன்னதானம்

பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அன்னதானம், குளிர்பானம் மற்றும் மோர் ஆகியவை வழங்குவார்கள். மேலும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெறும். ஊர்வலத்தில் வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பால் மற்றும் தீர்த்தக்குடத்தில் உள்ள புனித நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து அசுரர் தெய்வத்திற்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கப்படும். ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்தத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று தெளிப்பார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யம் கிடைப்பதாக பக்தர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது. 

கும்பாபிஷேகம்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆண்டு விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அசுரரை வணங்கினால் வாழ்வில் வசந்தம்....


ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு எதிரே அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அசுரர். இங்கு வருபவர்கள் முதலில் அசுரரை வணங்கி விட்டு அதன் பிறகு ஸ்ரீவைர முனீஸ்வரரை வணங்கி செல்கிறார்கள். அசுரருக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு சைவமே பிரதானமாகும். 
பேய், பிசாசு தொல்லையால் அவதிப்படுபவர்கள் மற்றும் பில்லி சூனியத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அசுரர் முன்பு வைத்திருக்கும் சாட்டையால் பாடம் போடப்படும். உடல்நலக்கோளாறால் அவதிப்படுபவர்களுக்கு 5 பாடமும், மற்றவர்களுக்கு ஒரு படமும் போடப்படும். அசுரரை வணங்கி எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் அவர்களது வாழ்வில் வசந்தம் ஏற்படும்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள்

கலியுக தெய்வம், அவதார புருஷர் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீவைர முனீஸ்வரர் அன்பின் வடிவமாக திகழ்கிறார். இந்த கோவிலின் முக்கிய நேர்த்திக்கடனாக மரமனை உள்ளது. தீராத நோயால் அவதிப்பட்டவர்கள் மற்றும் குழந்தைப்பேறு பெற்ற தம்பதிகள் இந்த வேண்டுதலை கட்டாயம் நிறைவேற்றுகிறார்கள்.
மரமனை என்பது சாமிக்கு சீர் செய்வதாகும். வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, பாக்கு, வெற்றிலை, பூ ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவைர முனீஸ்வரர் கொல்லங்கரடு மலையில் கிரிவலம் செல்வார். அவருக்கு முன்பாக பக்தர்கள் சீர் வரிசைகளை சுமந்துகொண்டு சுமார் 1Ñ கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வார்கள். அப்போது நடைபெறும் வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மரமனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்.

நேர்த்திக்கடன்








மூலவரான ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மற்றும் எலுமிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைப்பேறு வேண்டி கோவிலுக்கு வரும் தம்பதியினருக்கு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அந்த தம்பதியினருக்கு கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும். இதேபோல் கால் வலி மற்றும் உடல் வலியால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வாங்கிச்செல்கிறார்கள். இந்த எண்ணெயை தங்களது உடலில் தேய்த்துக்கொண்டால் அந்த வலி காணாமல் போய்விடுகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மையாகும்.
சுவாமியின் அருளால் குழந்தை பெற்றவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக தங்களுடைய குழந்தைகளுக்கு வைரமணி, வைரம், பட்டு வைரமணி, அஜய் வைரமணி ஆகிய பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள். சரிவர பேசமுடியாத குழந்தைகள் மற்றும் படிப்பில் போதிய கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை குடிக்கும் குழந்தைகள் கல்வி அறிவு மற்றும் பேச்சில் சிறந்து விளங்குகிறார்கள்.
இதேபோல் குழந்தைகளின் எடைக்கு எடை காசு போடுவார்கள். அதன் பிறகு பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மரமனை செய்து ஸ்ரீவைர முனீஸ்வரர் அருளை பெற்று செல்கிறார்கள்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நண்பனும் -அரசியல்வாதியும்



நண்பனும் அரசியல்வாதியும்
ஒன்று தான்! தேவைப்படும் போது தான்
இருவரும் தேடி வருவார்கள்!

காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள்!
பின்னர் நம் இதயத்தை
ரணமாக்கி விடுவார்கள்!

கண்ணீர் கதை விட்டு
ஆட்சியை பிடிப்பார்கள்!
பின்னர், நம்மை நடுத்தெருவிலே
விட்டு விட்டு செல்வார்கள்!

கரை வேட்டியை
தினமும் கட்டுவதால் அவர்களின்
மனதிலும் கரை புகுந்து விட்டதோ!

தோழா! தோழா! என்று
கூவி அழைத்து நம் மீதே
சேற்றை அள்ளி வீசுகிறார்களே!

தொண்டனை நம்பிய தலைவன்
தோற்றதாக சரித்திரம் இல்லை!
          ஆனால்
நண்பனை நம்பிய கர்ணன்
தோற்று தானே போனான்!

அரசியல் என்பது நாடகம் என்றால்!
அதில் நண்பன் என்பது நகைச்சுவை
பாத்திரம் தானே!

கட்சி! கட்சி! (நட்பு, நட்பு) என்று வசனம்
பேசியவர்கள்! கிழிந்த சட்டைகளுடன்
தெருவில் அழைந்தது தானே மிச்சம்!

கட்சிக்காக உயிரை விட்டவனையும்,
நட்புக்காக உயிரை விட்டவனையும்
நினைத்து பார்க்க ஒருவரும் இல்லை!

பதவியை இழந்தவன் தன்
சொந்தங்களை தான் இழக்கிறான்!

நட்பை இழந்தவன்
தன் நிம்மதியே இழக்கிறான்!

கட்சி பலருக்கு மயிர் என்றால்
நட்பு சிலருக்கு உயிர் தானே!


நான் உனக்கு எதிரியாக இருந்தாலும்
நீ எனக்கு நண்பன் தானே!

புரிந்து கொண்டால் நட்புக்குள்
பிளவுகள் இல்லை!

புரியாததால் தானே இருவரும்
கட்சியை தொடங்கி உள்ளோம்.....

நீ ஆளும் கட்சி....
நான் எதிர் கட்சி.....

நட்புடன்
பொ.த.தங்கமணி....

ஞாயிறு, 18 மார்ச், 2012

கார் திருட்டு

இப்போது வரும் நவீன விலை  உயாந்த கார்களில் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் செய்யப்படும் தொழில் நுடபங்கள், கார் திருடுவதை எளிதாக்கி விடுவதாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர்.


காரை பாதுகாக்க சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் இருந்தால் போதும். கூடுதல் பாதுகாப்புக்கு ஸ்டீயரிங் வீலை லாக் செய்தால் போதும் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி உங்கள் கார் தானாக ஸ்டார்ட் ஆனால்... நீங்கள் பிரேக்கை அழுத்தாமலே கார் பிரேக் பிடித்தால்... கார் மியூசிக் சிஸ்டம் தானாக பாட ஆரம்பித்தால்....? இதெல்லாம் நடக்கும் என்கிறார்கள், வாஷிங்டன் பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள்.

மிக விலை உயர்ந்த நவீன கார்களில் பல அம்சங்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் அடிப்படையில் இயங்குகின்றன.  இந்த கம்ப்யூட்டர்களை பிற கம்ப்யூட்டர்களைப்போலவே ஹாக் செய்ய முடியும். இதனை கொண்டு உங்கள் காரின் கடடுப்பாட்டை வேறு ஒரு கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ள முடியும். காரில் பாடிக்கொண்டிருக்கும் பாட்டை திடீரென்று நிறுத்தி வேறு ஒரு பாட்டை பாட வைக்கவும், காரின் பிரேக்கை பிடிக்க வைக்கவும் எங்கேயோ உள்ள ஒரு முகம்தெரியாத நபரால் முடியும். இதை கார் ஹேக்கிங் என்கிறார்கள்.


கார்களில் இப்போது ப்ளூ டூத், பென் டிரைவ், வை-பை போன்ற பல வசதிகள் வந்துவிட்டன. இதில் பென் டிரைவ் மூலமாகவோ, அல்லது ப்ளூ டூத் மூலமாகவோ இணைப்பை ஏற்படுத்தி காரில் உள்ள எலக்ட்ரானிக் விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள் அந்த பல்கலைக்கழக மாணவர்கள்.

இதை வெறும் ஆய்வு, அறிக்கையோடு நிறுத்தி விடாமல், பல்கலைக்கழகத்திற்கு சில கார்களை கொண்டு வந்து நிறுத்தி அந்த கார்களை ஹேக் செய்து காட்டி காரின் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி, கார் உரிமையாளர்களை உலகெங்கும் பயமுறுத்தியது. அதிர்ந்து போன கார் நிறுவனங்கள், காரின் எலக்ட்ரானிக் சிஸ்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக யாரும் நுழைந்து விட முடியாது. அது உச்சகட்ட பாதுகாப்புடன் புரோக்ராம் செய்யப்படுகிறது என்று விளக்கம் கொடுத்தன. ஆனாலும் இந்த ஹேக்கிங்கில் இருந்து தங்கள் தயாரிப்பு கார்களை பாதுகாக்க பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளன, கார் நிறுவனங்கள்.