திங்கள், 28 மார்ச், 2011

உளவாளி பெண்கள்


பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு காலம்தான். ரகசியத்தை கட்டிக்காக்கும் உளவுத்துறையிலேயே பெண் உளவாளிகள் இருந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து பிரிந்த 11 மாகாணங்கள் ஒன்றாக இணைந்தன. அப்படி இணைந்த மாகாணங்களை கான்பிடரெசி என்று அழைத்தனர். மற்ற மாகாணங்களை யூனியன் என்று அழைத்தார்கள். 1860களில் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்கு இதுதான் காரணம்.


அப்போது கான்பிடரெசி யின் உளவாளியாக நான்சிஹார்ட் என்ற பெண் செயல்பட்டார். போதை பொருளை கடத்தும் பெண்ணாக செயல்பட்டு மற்ற அமெரிக்க மாகாணங்களின் ராணுவ ரகசியங்களை உளவறிந்து வெளியிட்டார்.

கொஞ்ச நாட்களிலேயே அவர் கைதானார். அப்போது நான்சிக்கு 20 வயதுதான் ஆகி இருந்தது. இளமை பொங்க வலம் வந்த நான்சி, ஜெயில் வார்டனிடம் நைசாக பேசி, அவனது துப்பாக்கியை வாங்கி, அவனையே சுட்டுக்கொன்று தப்பித்தார். சிவில் போர் முடிந்தபிறகு திருமணம் செய்து விர்ஜினியாவில் குடியேறினார்.

இவரைப்போலவே பாலின் குஷ்மேன் என்ற பெண் அதே அமெரிக்காவில் சிவில் யுத்தத்தில் யூனியன் ஆர்மியின் உளவாளியாக செயல்பட்டார். ஒரு நடிகைபோல் நடித்து உளவுபார்த்தார்.

எதிரிகளின் ரகசியங்களை தனது ஷூவில் வரைந்து வைத்துக்கொள்வது இவரது ஸ்டைல். உளவு விஷயம் வெளியில் தெரிந்து எதிரிகளிடம் மாட்டிக்கொண்டார். இவருக்கு தூக்கு தண்டனையும் உறுதியானது. தூக்கில் போடுவதற்கு 3 நாட்களுக்கு முன், யூனியன் படைவீரர்களால் இவர் காப்பாற்றப்பட்டார்.

திறமை மிகுந்த இந்த உளவாளிப்பெண்ணை அன்றைய அமெரிக்க அதிபர் லிங்கன், மேஜராக பதவி உயர்த்தினார்.


இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டில் வேவுபார்த்தார் வர்ஜினியா ஹால் என்ற பெண். நாஜிக்களின் முகாம்களுக்குள்ளேயே தில்லாக புகுந்து தகவல்களை கொண்டு வரும் கில்லாடி.

நாஜிக்கள் இவரை கைது செய்ய முயற்சித்தனர். அதிலிருந்து விடுவித்து தப்பி ஓடினார். ஓடும்போது வழியில் கல் இடுக்கில் கால் மாட்டி ஒடிந்து போனது. ஒடிந்த காலோடு தப்பிவிட்டார்.

பிறகு கொஞ்ச நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அதன்பின் 1943&ல் ஒரு பால்காரி போல் வெளிவந்தார். மீண்டும் உளவு வேலைகளை பார்க்க தொடங்கினார். இதை மோப்பம்பிடித்த நாஜிக்களின் ரகசிய போலீசான கெஸ்டாபோ ஒரு விளம்பரம் செய்தது.

அதில் ஒரு காலை இழந்த பெண் ஒருத்தி மரக்காலுடன் வேவுபார்க்க நமது எல்லைக்குள் வந்திருக்கிறாள். அவளை நாம் கொல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. விளம்பரத்தை பார்த்த வர்ஜினியா மரக்காலை தூக்கி எறிந்தார். அவற்றின் உதவியில்லாமல் நடக்க பழகிக்கொண்டார்.

யுத்தம் முடிந்ததும் அவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. டிஸ்டிங்குஷ்டு சர்வீஸ் கிராஸ் என்ற விருது பெற்ற ஒரே சிவிலியன் பெண் இவர்தான்.

இப்படியாக பெண்கள் உளவாளிகளாகவும் சாதித்துள்ளனர். பெண்களிடம் ரகசியம் தங்காது என்ற பழைய பழமொழியை இனியாவது விட்டுத்தள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக