புதன், 23 பிப்ரவரி, 2011

உளவாளியின் மொழி


உளவாளியாக எதிரியின் இடத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்று உளவறிவதைவிட, ரகசியமாக தெரிந்த தகவலை பத்திரமாக கொண்டு சேர்ப்பதுதான் மிகவும் கடினமான வேலை.

இடையில் யாராவது ஒட்டுக் கேட்டாலும், செய்தி வேறு ஒருவர் கையில் கிடைத்துவிட்டாலும் என்ன தகவல் என்று தெரிந்து கொள்ள முடியாத மொழியில் அது இருக்கும்.

தகவல் தருபவர், தகவல் பெறுபவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய மொழி. இத்தகைய மொழிக்குத்தான் ‘கிரிப்டோ கிராபி‘ என்று பெயர்.
இந்த மொழி கி.மு.1900-ம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது.

எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாக்கியம்தான் கிரிப்டோகிராபியின் ஆரம்பம். முன்பெல்லாம் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மிகமிக குறைவு. அதனால் ரகசிய தகவல்களைகூட எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் நேரடியாகவே எழுதி அனுப்பினர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபின் விடுகதைகள், கவிதைகள் போன்றவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதன்பின் எழுத்துக்களை முன்&பின்னாக மாற்றி அமைத்து தகவல் அனுப்பினார்கள்.

உதாரணமாக DEVI என்ற பெயரை EFWJ என்று அனுப்புவார்கள். இது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் தகவல் பெறுபவர்களுக்கு தெரியும். எல்லா எழுத்துக்களுக்கும் முந்தைய எழுத்துகளை எழுதிக்கொண்டே வந்தால் அவர்கள் சொல்லும் தகவல் விளங்கிவிடும்.

ஜூலியஸ்சீசர் அந்த காலத்திலேயே ஒரு முறையை வைத்திருந்தார். அதற்கு சீசர் சைபர் என்று பெயர். போர்க்களத்தில் இருக்கும் தளபதிகளுக்கு வார்த்தைகளை கலைத்துப் போட்டு கடிதம் அனுப்புவார். இன்னொரு காவலாளி மூலம் அதை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்பை கொடுத்து அனுப்புவார்.

இரண்டு பேரும் எதிரிகள் கையில் ஒரே நேரத்தில் சிக்கினால் மட்டுமே எதிரியால் சீசர் என்ன செய்தி கொடுத்து அனுப்பினார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஹெரோ டோட்டஸ் என்பவர் வேறு ஒரு முறையை பயன்படுத்தினார். இவர் சொல்ல விரும்பும் செய்தியை ஓர் அடிமையின் தலையில் பச்சைக்குத்தி விடுவார். முடி வளர்ந்தபின்தான் அந்த செய்தியை சொல்லக் கிளம்புவான்.

தகவலை பெறுபவர் அடிமையை மொட்டை அடித்து தகவலை படித்துக் கொள்ள வேண்டும்.

நவீன காலத்தில் கம்ப்யூட்டர் வந்தபின் தகவல்களை மறைப்பதும், கடத்துவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சரியான பாஸ்வேர்டு, அல்லது கீ வேர்டு இருந்தால்தான் தகவலை திறக்கவே முடியும்.

இப்போதெல்லாம் டிஜிட்டல் கையெழுத்து, கண்ணுக்கு தெரியாத இன்விசிபிள் இங்க் என்று எவ்வளவோ வந்துவிட்டன.

இதே கிரிப்டோகிராபி முறையில்தான் ஏ.டி.எம். மெஷின்கள், இ-மெயில் பாஸ்வேர்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு ஏ.டி.எம். கார்டோ, இ-மெயில் அக்கவுண்டோ வைத்திருந்தால் நாமும் ஓர் உளவாளிதான்.

நமது ரகசியங்களை பாதுகாக்கும் உளவாளி. அவ்வளவுதான்.

கண்ணுக்கு கண் தண்டனை


ஈரானில் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை என்று கூறிவிட்டால் அவ்வளவுதான். குற்றவாளியை பொதுவான இடத்தில் நிறுத்தி வைத்து சுற்றிலும் மக்கள் நின்று கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.

இதற்காகவே இது போன்ற இடங்களில் கற்களை குவியலாக வைத்து இருப்பார்கள். குற்றவாளியானவர் பெண் என்றால், மண்ணில் குழிதோண்டி மார்பளவு உயரத்துக்கு மேலே தெரியும்படி நிறுத்தி, மூடி விடுவார்கள்.

மண்ணுக்கு மேலே தெரியும் இடங்களில் கல்லால் அடிப்பார்கள். அடுத்தடுத்து தபதபவென்று வந்து விழும் கற்களால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி குற்றவாளி இறந்து விடுவார்.

ஒரு வேளை ஆயுள் கெட்டி மனிதர்கள் இறக்காமல் இருந்து விட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் இருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்கள் போல மலேசியாவுக்கு ஷரியா என்ற அமைப்பு, தப்பு செய்தால் தண்டனை கொடுக்கும். பீர் குடித்தால், ஒருவரை அடியாட்களை வைத்து அடித்தால், தண்டனை நிச்சயம் உண்டு.

பிரம்பால் அடிப்பதுதான் தண்டனை. சுற்றிலும் மக்கள் கூட்டம் நிற்க, குற்றவாளிக்கு பிரம்படி வழங்கப்படும். பிரம்பால் அடித்தே தோலை உரித்து விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பிரம்படி தண்டனையை பெறுகிறார்கள்.

பிரம்புக்குச்சியால் அடிப்பதற்கு முன்பே அதை உப்புத்தண்ணீரில் ஊறவைத்து விடுகிறார்கள். அப்படி செய்தால்தான் அடிக்க வசதியாக இருக்குமாம். வலியும் தாங்க முடியாத அளவுக்கு போகுமாம். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்கிற தண்டனை இன்னமும் சவுதி அரேபியாவில் உண்டு.

சவுதியில் வாழ்ந்த இந்தியர் ஒருவர், அங்கிருக்கும் அரேபிய குடிமகனோடு சண்டை போட்டார். அப்போது எதிர்பாராமல் அவரது கை சவுதி அரேபியரின் கண்ணில் பட்டு விட்டது.

கொஞ்ச நாட்களில் பார்வையும் போய்விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தியரின் கண்களை தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

இதே போல் ஈரானிலும் ஒரு தண்டனை வழங்கப்பட்டது. 27 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கோபத்தில் தனது அழகான காதலியின் முகத்தில் திராவகம் ஊற்றிவிட்டார். வலி பொறுக்க முடியாமல் உருக்குலைந்த முகத்தோடு நீதிமன்ற படியேறினாள், காதலி.

வழக்கை விசாரித்து முடித்த நீதிமன்றம், ஆசிட்டின் வேதனை எவ்வளவு கொடூரமானது என்பதை அந்த காதலனுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் கண் முன்பாகவே, அந்தக்காதலனின் கண்களில் சொட்டுச்சொட்டாக ஆசிட்டை ஊற்றும்படி தீர்ப்பு வழங்கியது. தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காதலனின் கண்களும் முகமும் காதலியை போலவே சிதைந்து போயின.
கடுமையான தண்டனைகள்தான் குற்றத்தை குறைக்கும் என்பார்கள்.

அரபு நாடுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு தயவு தாட்சண்யம் பார்க்காத இதுபோன்ற கொடூர தண்டனைகள் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.

கட்டுக்கடங்காத காட்டுத் தீ


உலகமெங்கும் உள்ள மொத்த காடுகளின் வில்லன் யார் தெரியுமா? காட்டுத்தீ தான். மின்னல், எரிமலை, பாறைச்சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத்தீ உருவாக முக்கிய காரணங்களாக இருந்தன.

ஆனால் இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும் அணைக்கப்படாத சிகரெட் துண்டுகளும் காட்டுத்தீக்கு வழிவகுக்கின்றன.


கிட்டத்தட்ட 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டுத்தீ, காடுகளை அழித்து வந்திருக்கிறது. எதிரிகளின் ஊடுருவலை தடுக்க அந்த காலத்தில் ராணுவத்தினர் காட்டுக்கு தீ வைப்பதை பழக்கமாக கொண்டு இருந்திருக்கின்றனர்.

மரங்கள் இருக்கும் இடங்களில் இயற்கையாகவே அதிக அளவில் சுத்தமான ஆக்ஸிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்து விட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடு தீப்பற்றிக்கொண்டு எரிய தொடங்கியதுமே அந்த பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் 800 டிகிரி செல்சியஸ் வரை கூடும்.

வெப்பமான இடங்களில் இருக்கும் மரங்களின் நீர் ஆவியாகிவிடுவதால், மரங்கள் எல்லாம் ஈரப்பதம் இல்லாமல், காய்ந்த விறகுக்கட்டைகள் போல் மாறி விடும்.
காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதுவே புல்வெளி என்றால் 22 கிலோ மீட்டர் வேகத்தில் பரவும். புயல், பெரும் காற்று வீசும் சமயங்களில் கேட்கவே வேண்டாம்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த அது பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைப்பதுதான் தீர்வு. காட்டுத்தீ பரவும் திசைக்கு எதிர்திசையில் தீ வைத்துவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் மரம், மட்டைகள் கருகி தீய்ந்து விடும்.


காற்றின் போக்குக்கு வேகமாக பரவி சீறிவரும் காட்டுத்தீ, அந்த இடத்திற்கு பற்றி பரவ மரங்கள் மிச்சம் எதுவும் இருக்காது. இதனால் காட்டுத்தீயின் வேகம் கலைந்து அது அணைந்து விடும்.

ஆனால் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீ திசை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அது எந்த திசைகளில் எல்லாம் பரவும் என்பதையும் எளிதில் கணிக்க முடியாது. சில நாடுகளில் சில்வர் அயோடைட் பொடிகளை ஹெலிகாப்டர் மூலம் தூவி செயற்கை மழையை உருவாக்கி காட்டுத்தீயை கட்டுப்படுத்துவார்கள்.

காட்டுத்தீ சில நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கின்றது. இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தீ பிடித்து எரிவதால் ஏற்படும் கரியமில வாயுக்கள் சுற்றுச்சூழலுக்கும் பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்துகின்றன.

காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால் வெப்ப புயல் உருவாகும். இது உலகின் பருவநிலை மாற்றத்துக்கும் முக்கிய காரணமாக அமைந்து விடும்.
2030-ம் ஆண்டு இறுதிக்குள் அமேசான் காடுகளில் 55 சதவிகித அளவுக்கு காட்டுத்தீயால் அழிந்து போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், புவி வெப்பத்தை தடுக்கவும் அதிகமான மரங்கள் வளர்ப்பதுதான் தீர்வு. எனவே மரங்கள் நடுவோம்! பூமியை காப்போம்!